ஐபிஎல் பிளே-ஆஃப் குவாலிफையர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு தகுதி பெற வைத்துள்ளார் 15 வயதே ஆன இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி. கிறிஸ் கெயிலின் பல சாதனைகளை முறியடித்த இந்த சிறுவனை ஏற்கனவே உலக ஜாம்பவான்கள் பலரும் பாராட்டி வரும் நிலையில், தற்போது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளரும், ஆஸ்திரேலிய கிரிக்கெட் ஜாம்பவானுமான ஜஸ்டின் லேங்கர் வைபவ்வின் ஆட்டத்தை பார்த்து மிரண்டு போய் சமூக வலைத்தளத்தில் ஒரு பெரிய பதிவை வெளியிட்டுள்ளார்.

​அதில் லேங்கர், “இந்த 15 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி எப்படி விளையாடுகிறான் என்றே எனக்குப் புரியவில்லை. சமீபத்தில் என்னுடைய லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை மைதானத்தின் நாலாபுறமும் ஓட ஓட விரட்டி வெளுத்து வாங்கினான். இந்த கிரிக்கெட் விளையாட்டில் நான் 35 வருடங்களை கழித்துவிட்டேன், ஆனால் இந்த சிறுவனின் ஆட்டத்தை என்னால் இன்னும் நம்பவே முடியவில்லை;

இதற்கு முன்பு நான் இப்படி ஒரு அதிரடியைப் பார்த்ததே இல்லை. நேற்றிரவு ப்ளே-ஆஃப் போட்டியிலும் அதே வெறித்தனத்தை மீண்டும் செய்து காட்டியுள்ளான். டி20 கிரிக்கெட் வரலாற்றில் மிக இளம் வயது சதம் அடித்த வீரரான வைபவ்வின் இந்த அசாத்திய திறமை என்னை வியந்து யோசிக்க வைத்துள்ளது” என்று லேங்கர் நெகிழ்ச்சியுடன் பாராட்டியுள்ளார்.