திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அரசை கடுமையாக விமர்சித்துள்ளார்.

கோவில்களில் கூட்டம் அதிகமாக கூடும் நேரங்களில், குழந்தைகளும் பெரியவர்களும் தரிசனத்திற்காக 3 முதல் 4 மணி நேரம் காத்துக் கிடக்கும் அவலநிலை உள்ளதாகக் குறிப்பிட்ட அவர், பக்தர்கள் இயல்பாக சாமி தரிசனம் செய்ய இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் உரிய வழிவகை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

மேலும், தமிழகத்தில் பெண்கள் பாதுகாப்பு, மின்வெட்டு மற்றும் ஊழல் போன்ற விஷயங்களால் மக்கள் மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளதாகக் கூறிய அவர், மக்கள் தவெக அரசுக்கு ‘பவர்’ கொடுத்தனர், ஆனால் இந்த அரசு மக்களுக்கு ‘பவர் கட்’டை (மின்வெட்டு) மட்டுமே பரிசாக வழங்குகிறது என்று சாடினார்.

மறுபுறம், கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக அரசின் அமைச்சர் சம்பத்குமார், அரசு மருத்துவமனைகளில் நிலவும் குறைபாடுகள் களையப்பட்டு விரைவில் அதிரடி மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

மேலும், கோவை மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான மெட்ரோ ரயில் திட்டத்தைக் கொண்டு வருவது தவெகவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்று என்றும், அதனை நிறைவேற்ற அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது என்றும் அவர் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக அரசியலில் ஒருபக்கம் எதிர்க்கட்சிகளின் கடுமையான விமர்சனங்களும், மறுபக்கம் ஆளுங்கட்சியின் புதிய திட்ட அறிவிப்புகளும் தற்பொழுது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.