தமிழக வெற்றிக் கழக அரசின் அறிவிப்பை ஏற்று, தனது தந்தை பெருமாளை நேராக அரசு மருத்துவமனையில் அனுமதித்து இரவு முழுவதும் கூடவே இருந்து கவனித்துக் கொண்ட சிறு, குறு தொழில்துறை அமைச்சர் மதன் ராஜாவின் செயல் பொதுமக்களிடையே பெரும் நெகிழ்ச்சியையும் பாராட்டையும் பெற்றுள்ளது.

முன்னதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் அருண்ராஜ், அரசு அதிகாரிகள், அமைச்சர்கள் மற்றும் தவெக நிர்வாகிகள் அனைவரும் தங்களது மற்றும் குடும்பத்தினரின் மருத்துவச் சிகிச்சைகளை அரசு மருத்துவமனைகளிலேயே மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்த நடைமுறையை அப்படியே பின்பற்றி, வயது மூப்பு காரணமாக திடீரென உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட தனது தந்தையை அமைச்சர் மதன் ராஜா முதலில் கோவில்பட்டி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதித்தார்.

அரசு மருத்துவமனையில் தந்தையை அனுமதித்தது மட்டுமின்றி, இரவு முழுவதும் மருத்துவமனையிலேயே தங்கி இருந்து அவருக்குத் தேவையான சிகிச்சைகள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை அமைச்சர் மதன் ராஜா நேரில் கண்காணித்தார்.

நேற்று காலையில் தனது மனைவியை தந்தைக்கு உதவியாக மருத்துவமனையில் இருக்க வைத்துவிட்டு அவர் புறப்பட்டுச் சென்றார். முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் இந்த வழிகாட்டுதலை ஒரு அமைச்சரே முன்னுதாரணமாக நின்று செயல்படுத்திய விதம், தற்போது சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் மற்றும் பொதுமக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டு வைரலாகி வருகிறது.