சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு அதிமுகவில் ஏற்பட்ட கடுமையான பிளவுகள் தற்காலிகமாக முடிவுக்கு வந்து, தற்போது இரு அணிகளும் ஒன்றிணைந்து வரும் சூழலிலும் அக்கட்சியின் உட்கட்சி அதிருப்தி ஓயவில்லை என்பதை காட்டும் விதமாக அடுத்த அதிரடி திருப்பம் அரங்கேறியுள்ளது. அதிமுகவின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீதான பலத்த அதிருப்தி காரணமாக, அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் மாஜிக்களும் அடுத்தடுத்து தவெக (தமிழக வெற்றிக் கழகம்) கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, இன்று (மே 28) அதிமுகவின் முக்கியப் புள்ளிகளான பரமகுடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சதன் பிரபாகரன் மற்றும் நகர்மன்ற உறுப்பினர் வின்சென்ட் ஆகியோர் தங்களை அதிகாரப்பூர்வமாக தவெக-வில் இணைத்துக் கொண்டுள்ளனர். ​அமைச்சரும் தவெக-வின் முக்கிய நிர்வாகியுமான செங்கோட்டையன் முன்னிலையில் இந்த அதிரடி இணைப்பு விழா இன்று விறுவிறுப்பாக நடந்து முடிந்துள்ளது.

அதிமுகவின் இரு அணிகளும் இணைந்த பிறகும் கூட, கீழ்மட்ட மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மத்தியில் தலைமை மீது நிலவும் அதிருப்தி காரணமாகவே இந்த கட்சி தாவல்கள் அடுத்தடுத்து நடந்து வருவதாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது. தவெக-வின் இந்த அடுத்தடுத்த மெகா மூவ்கள் மற்றும் விஐபி சேர்க்கைகள், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக கூடாரத்திற்கு மீண்டும் ஒரு பலத்த அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் இந்த செய்தி செம வைரலாகி வருகிறது.