ஐபிஎல் 2026 சீசனின் எலிமினேட்டர் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் தோல்வி அடைந்து நடப்பு தொடரிலிருந்து வெளியேறியது.

இந்தத் தோல்வியால் ஹைதராபாத் அணியின் உரிமையாளரும், அந்த அணியின் மிக தீவிர ரசிகையுமான காவியா மாறன் கடும் சோகத்திலும் ஏமாற்றத்திலும் மூழ்கினார்.

வழக்கம்போல கேலரியில் அமர்ந்து அணியை உற்சாகப்படுத்திய காவியாவின் முகத்தில், தோல்வியின் வலியும் விரக்தியும் தெளிவாகத் தெரிந்தது. இருப்பினும், போட்டி முடிந்த பிறகு அவர் செய்த ஒரு காரியம் ஒட்டுமொத்த கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களையும் வென்றுள்ளது.

பொதுவாக ஐபிஎல் போட்டிகளின் போது காவியா மாறன் மைதானத்திற்குள் இறங்குவதில்லை; கேலரியில் இருந்தே போட்டியை ரசிப்பார். ஆனால், இந்த எலிமினேட்டர் போட்டி முடிந்ததும் அவர் நேரடியாக மைதானத்திற்குள் இறங்கி, தனது அணி வீரர்களுக்கு ஆறுதல் கூறினார்.

அதுமட்டுமின்றி, ஹைதராபாத் அணியை அதிரடியாக வீழ்த்திய எதிரணியான ராஜஸ்தான் ராயல்ஸின் 15 வயது இளம் நட்சத்திர வீரர் வைபவ் சூர்யவன்ஷியை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்தினார்.

வைபவ் வெறும் 29 பந்துகளில் 97 ரன்கள் குவித்து அதிரடி காட்டியது காவியாவை வெகுவாகக் கவர்ந்திருந்தது. தோல்வியின் துயரத்தை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, அந்தச் சிறுவனின் அசாத்திய திறமைக்கு அவர் கொடுத்த இந்த மரியாதை நெட்டிசன்களை நெகிழ வைத்துள்ளது.

“>

 

மேலும், மைதானத்திற்குள் வந்த காவியா மாறன், ஹைதராபாத் அணியின் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் மற்றும் ஆலோசகர் முத்தையா முரளிதரன் ஆகியோருடன் நீண்ட நேரம் ஆலோசனையில் ஈடுபட்டார். தோல்விக்கு பின் சோகமாக இருந்தாலும், வீரர்களிடம் பேசும்போது அவர் முகத்தில் புன்னகை பூத்தது, அவரது உயரிய விளையாட்டுப் பண்பை வெளிப்படுத்தியது.