குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டத்தில், குடும்பத் தகராறு காரணமாக நிஷா வார்லி (28) என்ற தாய் தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துக் கொன்றுவிட்டு, தானும் ஃபினாயில் குடித்துத் தற்கொலைக்கு முயன்ற அதிர்ச்சிகரமான சம்பவம் புதன்கிழமை நடந்துள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு திருமணமான இந்தத் தம்பதிக்கு நைரா (2) என்ற மகளும், அயான்ஷ், விஹான் என்ற 9 மாத இரட்டை ஆண் குழந்தைகளும் இருந்தனர்.

மீனவரான கணவர் சஞ்சய் ஹல்பதி, சில நாட்களுக்கு முன்பு தனது மனைவியின் மொபைல் போனைச் சோதித்தபோது, அவருக்கு வேறொரு நபருடன் தவறான உறவு இருப்பது தெரியவந்துள்ளது.

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டு, குழந்தைகளை இங்கேயே விட்டுவிட்டு வீட்டை விட்டு வெளியேறுமாறு நிஷாவிடம் சஞ்சய் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நிஷா, செவ்வாய்க்கிழமை இரவு தனது மூன்று குழந்தைகளுக்கும் விஷம் கொடுத்துவிட்டு, தானும் ஃபினாயில் குடித்துள்ளார்.

புதன்கிழமை காலையில் இக்கொடூரச் சம்பவத்தைக் கண்டு அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், குழந்தைகள் மற்றும் நிஷாவை மீட்டு சூரத் சிவில் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அங்கு குழந்தைகளைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வரும் நிஷா, போலீஸ் விசாரணையில் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். கணவர் சஞ்சய் கொடுத்த புகாரின் பேரில், சரிகாம் போலீசார் நிஷா மீது கொலை வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.