இந்திய ஸ்டார்ட்அப் உலகின் ‘போஸ்டர் பாய்’ ஆகக் கொண்டாடப்பட்டு, தற்போது கடும் சரிவைச் சந்தித்து வரும் ‘பைஜூஸ்’ (Byju’s) நிறுவனத் தலைவர் பைஜூ ரவீந்திரனுக்கு, சிங்கப்பூர் நீதிமன்றம் 6 மாத சிறை தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது கார்ப்பரேட் உலகையே உலுக்கியுள்ளது.
கடந்த 2024 ஏப்ரல் முதல் சொத்து விவரங்களை சமர்ப்பிக்கக் கோரிய நீதிமன்ற உத்தரவுகளைத் தொடர்ந்து மதிக்காமல் அவமதித்ததாக, கத்தார் நாட்டின் ‘கத்தார் இன்வெஸ்ட்மென்ட் அத்தாரிட்டி’ (QIA) தொடர்ந்த வழக்கில் இந்த அதிரடி ஆக்ஷன் பாய்ந்துள்ளது.
நீதிமன்றத்தில் உடனடியாகச் சரணடைய உத்தரவிடப்பட்டுள்ள பைஜூ ரவீந்திரன், வழக்கின் செலவுத் தொகையான 70,500 டாலரை (சுமார் 58 லட்சம் ரூபாய் முதல் 67 லட்சம் ரூபாய் வரை) செலுத்த வேண்டும் என்றும், ‘பீயார் இன்வெஸ்ட்கோ’ (Beeaar Investco Pte) நிறுவனத்தின் அசல் ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கெடு விதித்துள்ளது.
அமெரிக்காவில் 1.2 பில்லியன் டாலர் (சுமார் 10,000 கோடி ரூபாய்) கடன் கொடுத்த நிறுவனங்களுடன் ஏற்கனவே நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளைச் சந்தித்து வரும் வேளையில், சிங்கப்பூர் கோர்ட்டின் இந்தத் தீர்ப்பு அவருக்குப் பேரிடியாக அமைந்துள்ளது.
இருப்பினும், இந்த விவகாரம் குறித்து ட்விட்டரில் (X) தனது மௌனத்தைக் கலைத்துள்ள பைஜூ ரவீந்திரன், “இந்தத் தீர்ப்பு வெறும் ஆவணங்களைச் சமர்ப்பிக்காததற்கான ஒரு நடைமுறை சிக்கல்தானே தவிர, எந்தவொரு மோசடியோ அல்லது நேர்மையற்ற செயலோ இல்லை” என்று மாஸ் விளக்கமளித்துள்ளார்.
கடன் கொடுத்த நிறுவனங்களுடன் கடந்த 3 மாதங்களாக அமைதியான முறையில் சமரசப் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அனைத்தும் முடிவடையும் தருவாயில் கத்தார் நிறுவனம் வீணாக நெருக்கடி கொடுப்பதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஜூன் 15-ஆம் தேதி மேல்முறையீடு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு காலத்தில் 22 பில்லியன் டாலர் மதிப்பில் கொடிகட்டிப் பறந்த நிறுவனம் இன்று பூஜ்ஜிய நிலைக்கு வந்து, அதன் நிறுவனர் சர்வதேசச் சட்டச் சிக்கல்களில் தவித்து வருவது ஒட்டுமொத்த வர்த்தக உலகிலும் த்ரில்லிங்கான விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது!
