குஜராத் மாநிலம்  பாலன்பூர் பகுதியில், கணவனே தனது நண்பர்களுடன் சேர்ந்து சொந்த மனைவியை ரூ.50 ஆயிரத்திற்கு அநாகரிகமான முறையில் விற்று, கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ள அதிர்ச்சிச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. பாதிக்கப்பட்ட பெண் அடைத்து வைக்கப்பட்டு, தொடர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதோடு, அவரது தங்க நகைகளும் வலுக்கட்டாயமாகப் பறிக்கப்பட்டு விற்கப்பட்டுள்ளன.

இந்த வழக்கில் முக்கியக் குற்றவாளியான கணவன் நிகேஷ் படேல் மற்றும் அவனது கூட்டாளிகளான சஞ்சய் தாகூர், அசோக் தாகூர், சச்சின் தர்பார் உள்ளிட்ட மொத்தம் 7 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த மே 11 அன்று தனது மனைவி காணாமல் போய்விட்டதாக நிகேஷ் படேல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். ஆனால், அடுத்த இரண்டு நாட்களில் அவரும் திடீரென மாயமானதால், அவனது தந்தை மற்றொரு புகாரைப் பதிவு செய்தார். இந்த அடுத்தடுத்த சம்பவங்களால் சந்தேகமடைந்த காவல்துறையினர், தீவிர விசாரணை நடத்தி இருவரையும் மீட்டது.

அப்போது பாதிக்கப்பட்ட பெண் அளித்த வாக்குமூலத்தில், தனது கணவன் பணத்திற்காகத் திட்டமிட்டுத் தன்னை விற்றதாகவும், நகைகளைப் பறித்துக்கொண்டு வன்கொடுமை செய்ததாகவும் பகீர் குற்றச்சாட்டுகளை அடுக்கினார். விசாரணையில், கைது செய்யப்பட்டுள்ள நிகேஷ் படேல் ஏற்கனவே திருமணமானவர் என்பதும், பல பெண்களை ஏமாற்றிக் கடத்திய குற்றப்பின்னணி கொண்டவர் என்பதும் தெரியவந்துள்ளது. இக்கொடூர நெட்வொர்க் குறித்து போலீஸார் மேலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.