“தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகள் மிகச் சிறப்பாக இருக்கிறது” என்று முன்னாள் எம்.எல்.ஏ இசக்கி சுப்பையா தவெக அரசை வெகுவாகப் பாராட்டியுள்ளார். தான் தேர்தலில் போட்டியிட்டபோது மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளான, லஞ்சம் வாங்க மாட்டேன், பொய் சொல்ல மாட்டேன் போன்ற நேர்மையான விஷயங்கள் அனைத்தும் தற்போதைய முதலமைச்சரின் செயல்பாடுகளில் மிக அழகாகப் பிரதிபலிக்கிறது என்று அவர் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.
வெறும் 15 நாட்களிலேயே இந்த நல்ல மாற்றங்களை மக்கள் பார்க்கத் தொடங்கிவிட்டதாக அவர் புகழாரம் சூட்டியுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், தனது அரசியல் எண்ண அலைகள் தற்போதைய முதலமைச்சரோடு பக்காவாக பொருந்துவதாகக் குறிப்பிட்டுள்ளார். வரும் தேர்தலில் தனக்கு மீண்டும் போட்டியிட சீட் கொடுத்தால் தாராளமாக நிற்பேன் என்றும், ஒருவேளை சீட் கொடுக்காவிட்டாலும் கவலையில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
முதலமைச்சர் யாரை வேட்பாளராக நிறுத்தினாலும் அவர்களின் வெற்றிக்காகத் தான் முன்னின்று உழைக்கத் தயாராக இருப்பதாகவும், இந்த முதலமைச்சரின் கீழ் பணியாற்றும்போது தொகுதிக்கு நிச்சயமாக நல்லது நடக்கும் என்ற தீர்க்கமான நம்பிக்கை தனக்கு இருப்பதாக இசக்கி சுப்பையா அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
