தமிழகத்தில் உள்ள அம்மா உணவகங்களில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படங்கள் நீக்கப்பட்டு, தற்போதைய முதலமைச்சரின் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ளதற்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (அதிமுக) தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பாக அதிமுக வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிக்கையில், “அம்மா உணவகம்” என்றாலே உலகெங்கும் வாழும் தமிழர்களின் எண்ணங்களிலும் உள்ளங்களிலும் ஜெயலலிதாவின் திருவுருவமே தோன்றும் என்றும், வரலாற்றில் நிலைத்து நிற்கும் இத்திட்டத்தில் அவரது புகைப்படங்களை நீக்கிவிட்டு தற்போதைய முதலமைச்சரின் படத்தை வைப்பதால் மட்டும் இது புதிய அரசின் திட்டம் என்று மக்கள் நம்பிவிட மாட்டார்கள் என்றும் சாடியுள்ளது.

எல்லாவற்றையும் இன்ஸ்டாகிராம் போன்ற ஒரு ‘பேரலல் யுனிவர்ஸ்’ (Parallel Universe) மாய உலகத்தை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்ற முடியாது என்பதை இன்றைய முதலமைச்சர் உணர வேண்டும் என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், தமிழகம் முழுவதும் உள்ள அம்மா உணவகங்களில் உடனடியாக ஜெயலலிதாவின் புகைப்படங்களை மீண்டும் நிறுவ வேண்டும் என்றும், அம்மா உணவகங்களின் சீரான செயல்பாடுகள் குறித்து அரசு வெளியிட்ட அறிவிப்புகளை வெறும் விளம்பரமாக நிறுத்தாமல், அவற்றைச் செயல்படுத்துவதில் முழு முனைப்பு காட்ட வேண்டும் என்றும் தற்போதைய அரசை அதிமுக வலியுறுத்தியுள்ளது.