தமிழகத்தில் சட்டவிரோத குவாரி செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், இயற்கை வளங்கள் துறை அமைச்சர் டி.கே.பிரபு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார்.
விருதுநகர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளுடன் அமைச்சர் டி.கே.பிரபு இன்று (மே 27) அவசரக் கலந்தாய்வு நடத்தினார். இக்கூட்டத்தில், நவீன தொழில்நுட்பமான ‘ட்ரோன்’ எனப்படும் ஆளில்லா விமானங்கள் மூலம் குவாரிகளில் நடத்தப்பட்ட துல்லியமான அளவீட்டு ஆய்வுகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இந்த ஆய்வறிக்கையின் அடிப்படையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குத்தகை பரப்பளவை மீறி, அதற்கு வெளியேயும் அத்துமீறி குவாரி பணிகளில் ஈடுபட்டு வந்த 23 குவாரிகளின் செயல்பாடுகளை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தி வைக்க அமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
மேலும், இந்த ஆளில்லா விமான அளவீட்டு அறிக்கையின் முழு விபரங்களின்படி, விதிமீறலில் ஈடுபட்ட குவாரிகள் மீது சட்டப்படி கடுமையான மேல்நடவடிக்கை பாயும் என்றும் அமைச்சர் டி.கே.பிரபு எச்சரித்துள்ளார். இந்த அதிரடி நடவடிக்கை குவாரி அதிபர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
