நடப்பு ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணி பிளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறாமல் வெளியேறியதைத் தொடர்ந்து, அந்த அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரின் தங்கை ஸ்ரேஷ்டா ஐயரின் பழைய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் மீண்டும் வெளியாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்தாகி, இரு அணிகளுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்பட்டது. அப்போது, அந்த 1 புள்ளியை கொல்கத்தா அணிக்குத் தாங்கள் வழங்கிய ‘தானம்’ என்று பஞ்சாப் ரசிகர்களுடன் சேர்ந்து ஸ்ரேஷ்டா ஐயர் நடனமாடி கிண்டல் செய்திருந்தார். பஞ்சாப் அணியின் தற்போதைய தோல்விக்குப் பிறகு, கொல்கத்தா ரசிகர்கள் இந்த வீடியோவை வைத்து அவரை மிகக் கடுமையாக ட்ரோல் செய்து வருகின்றனர்.
View this post on Instagram
தொடர்ச்சியான ஆன்லைன் ட்ரோலிங் மற்றும் அத்துமீறல்களுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஸ்ரேஷ்டா ஐயர் தற்போது சமூக வலைத்தளங்களில் இரண்டு வீடியோக்களை வெளியிட்டுத் தனது குமுறலையும் ஆவேசத்தையும் வெளிப்படுத்தியுள்ளார். அதில், “நான் விளையாட்டுத் தனமாகச் செய்த ஒரு சிறிய விஷயத்தைப் பெரிதாக்கி விட்டார்கள். எனது அண்ணனின் அணியை நான் ஆதரித்ததில் எந்தத் தவறும் இல்லை. அதற்காக நான் மற்ற வீரர்களையோ, அணிகளையோ வெறுக்கிறேன் என்று அர்த்தமல்ல. என் அண்ணனும் ஒரு கிரிக்கெட் வீரர் என்பதால் அனைத்து வீரர்களின் உழைப்பையும் நான் மதிக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
View this post on Instagram
மேலும், சமூக வலைத்தளங்களில் இருக்கும் வேலையில்லாத சில நபர்கள் தனது கமெண்ட் பக்கத்தில் ஆபாசமான மெசேஜ்களைப் பரப்புவதோடு நிறுத்தாமல், தனது அலுவலகத்திற்குத் தொடர்பு கொண்டு தனது சக ஊழியர்கள், மாணவர்கள் மற்றும் குடும்பத்தினரைக் கெட்ட வார்த்தைகளால் திட்டி அச்சுறுத்துவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். கிரிக்கெட் போட்டிகளில் ஒரு அணி தோற்கும் போதெல்லாம், சம்பந்தப்பட்ட வீரர்களின் மனைவிகளையோ அல்லது சகோதரிகளையோ குறிவைத்து ரசிகர்கள் பழிவாங்குவது அநாகரிகமானது என்றும், வெற்றியும் தோல்வியும் விளையாட்டின் ஒரு பகுதி என்பதால் தனது அண்ணன் எப்போது வெற்றி பெற்றாலும் தான் அதைத் தொடர்ந்து கொண்டாடுவேன் என்றும் அவர் மிகத் தைரியமாகத் தனது வீடியோவில் முழங்கியுள்ளார்.
