டெல்லியின் கோவிந்த்புரி பகுதியில் நடந்த கொடூர இரட்டைப் படுகொலை வழக்கை, டெல்லி போலீஸார் 72 மணி நேரத்திற்குள் துப்புலக்கி, குற்றவாளியை என்கவுண்டர் மூலம் கைது செய்துள்ளனர். அதாவது கடந்த சனிக்கிழமை அதிகாலை நடந்த துப்பாக்கிச் சண்டைக்குப் பின், முதன்மைக் குற்றவாளியான சௌரவ் சாஹு என்பவரை போலீஸார் கைது செய்தனர். அப்போது குற்றவாளியின் காலில் துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது.

இது பற்றி போலீஸ் துணை ஆணையர் ஹேமந்த் திவாரி கூறுகையில், “குற்றவாளி சௌரவ் சாஹு, தனது அக்கா சாரதா சாஹு (38) வீட்டிற்குச் சென்று, தொழில் தொடங்க 2 லட்சம் ரூபாய் பணம் கேட்டுள்ளார். சாரதாவின் கணவர் விஷ்ணு தொழில் ரீதியாகச் சிறப்பாக இருந்ததால் அவரிடம் பணம் இருக்கும் என சௌரவ் நம்பியுள்ளார். ஆனால், சௌரவ் போதைக்கு அடிமையானவர் என்பதால், ‘உன் போதைக்காக ஒரு ரூபாய் கூட தர மாட்டேன்; ஒழுங்காக வேலைக்குச் செல்’ என சாரதா கண்டித்துள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த சௌரவ், மறைத்து வைத்திருந்த கத்தியால் சாரதாவைத் தாக்கினார். அம்மா ரத்த வெள்ளத்தில் சரிவதைக் கண்ட அவரது 13 வயது மகன் குஷால், ‘மாமா, அம்மாவை அடிக்காதீர்கள்’ என சௌரவின் காலைப் பிடித்துக் கதறியுள்ளான். ஆனால், போதை வெறியில் இருந்த சௌரவ், சாரதா மற்றும் சிறுவன் குஷால் ஆகிய இருவரையும் 15 முதல் 18 முறை கத்தியால் கொடூரமாகக் குத்திக் கொலை செய்துவிட்டுத் தப்பியோடினார்” என்றார்.

அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீஸார், குற்றவாளியை அடையாளம் கண்டு வளைத்துப் பிடித்தனர். அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி மற்றும் இரத்தம் படிந்த ஆடைகள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்ட சௌரவ் மீது ஏற்கனவே பல திருட்டு, வழிப்பறி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.