பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே மற்றும் லக்ஷ்யா லால்வானி நடிப்பில் கடந்த மே 22, 2026 அன்று வெளியான ‘சாந்த் மேரா தில்’ திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள பரதநாட்டிய நடனக் காட்சி, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையையும் கண்டனங்களையும் குவித்து வருகிறது.

கல்லூரி காதல், திருமணத்திற்கு முந்தைய கர்ப்பம், அதனால் ஏற்படும் உணர்வுப் போராட்டங்களை மையமாகக் கொண்டு வெளியான இத்திரைப்படம், நடிகர்களின் சிறந்த நடிப்பிற்காகப் பாராட்டுகளைப் பெற்று வந்தது. ஆனால், படத்தில் வரும் ஒரு பாடலில், நடிகை அனன்யா பாண்டே பாரம்பரிய பரதநாட்டியக் கலையை நவீன இசையோடு கலந்து ‘ஃபியூஷன்’ முறையில் ஆடியுள்ளார். பின்னணியில் நடராஜர் சிலை இருக்க, முறையற்ற கையாட்சிகளுடனும், திருமண விழாக்களில் ஆடுவது போன்ற அசைவுகளுடனும் இந்த நடனம் அமைந்துள்ளதாகக் கூறி நெட்டிசன்கள் ஆக்ரோஷமடைந்துள்ளனர்.

இணையத்தில் வைரலாகும் இக்காட்சியைப் பார்த்துவிட்டு, “நமது பாரம்பரிய கலை சிதைக்கப்படுவதைப் பார்க்கும்போது காதில் ரத்தம் வருகிறது”, “பணக்காரனாக இருந்திருந்தால் போனை உடைத்திருப்பேன்” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது குமுறல்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

இக்காட்சி குறித்து பிரபல பரதநாட்டியக் கலைஞர் அனிதா ரத்னம் தனது கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். அவர் கூறுகையில், “இந்த நடனக் காட்சியைப் பார்க்கும்போது, ஏதோ நிலநடுக்கத்தின் போது படப்பிடிப்பு நடத்தியது போல் கேமரா நகர்கிறது. பரதநாட்டியம் என்பது துல்லியம், கட்டுப்பாடு மற்றும் பாரம்பரிய ஆழம் கொண்டது. ஆனால், இந்தத் தவற்றைப் பற்றிய எந்த குற்ற உணர்ச்சியும் இல்லாமல் இக்காட்சி படமாக்கப்பட்டுள்ளது” என்று சாடியுள்ளார்.