ஜான்பூரைச் சேர்ந்த டெல்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர், லக்னோவில் போதைப்பொருள் கொடுத்து மூன்று இளைஞர்களால் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக அதிர்ச்சிகரமான புகாரை அளித்துள்ளார். ஜான்பூரிலிருந்து டெல்லிக்கு ரயிலில் பயணம் செய்தபோது, அறிமுகமான ஒருவரின் பேச்சைக் கேட்டு லக்னோவில் இறங்கிய மாணவியை, அவர்கள் ஒரு அறைக்கு அழைத்துச் சென்று போதை கலந்த காபி கொடுத்து மயக்கமடையச் செய்துள்ளனர்.

மேலும் அங்கிருந்த மூன்று பேர் நான்கு நாட்களாக அவரைத் தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் அவர் தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து டெல்லி ரயில்வே காவல் நிலையத்தில் முதலில் புகார் பதிவு செய்யப்பட்டு, பின்னர் லக்னோ காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது.

இதனால் மாணவியின் புகாரின் அடிப்படையில், சிவம் யாதவ் மற்றும் சன்னி யாதவ் உட்பட மூன்று பேர் மீது கூட்டுப் பாலியல் வன்கொடுமை, போதைப்பொருள் கொடுத்து காயம் ஏற்படுத்துதல் மற்றும் மிரட்டல் ஆகிய பிரிவுகளின் கீழ் லக்னோ காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தற்போது குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.