பீகார் மாநிலம் பாட்னா அருகே உள்ள பர்ஹ் பஞ்சமஹலா பகுதியில், பிரபல ரவுடிகளான சோனு மற்றும் மோனு ஆகியோரின் ஆதரவாளர்களுக்கும், முன்னாள் எம்.எல்.ஏ ஆனந்த் சிங்கின் ஆதரவாளர் முகேஷ் குமார் என்பவருக்கும் இடையே திடீரென துப்பாக்கிச் சூடு மோதல் வெடித்துள்ளது.

இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததும், ஹதிதா காவல் நிலைய அதிகாரி ரஞ்சன் குமார் தலைமையிலான போலீசார் நள்ளிரவில் ரவுடி சோனுவின் வீட்டிற்கு அதிரடி சோதனை நடத்த விரைந்துள்ளனர்.

ஆனால், போலீசாரைக் கண்டதும் ரவுடிகளின் தாயார் ஊர்மிளா சின்ஹா மற்றும் அவர்களது ஆதரவாளர்கள், பெண் போலீஸ் இல்லாததை சுட்டிக்காட்டியும், வாரண்ட் இல்லை என்று கூறியும் போலீசாரை வீட்டிற்குள் நுழைய விடாமல் தடுத்து நிறுத்தி நடுரோட்டில் மெகா பஞ்சாயத்து செய்துள்ளனர்.

சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அந்த ரவுடி கும்பல், இறுதியில் ஒரு விசித்திரமான நிபந்தனையை விதித்துள்ளது. “நீங்க உள்ளே போய் சோதனை நடத்தணும்னா, முதலில் உங்ககிட்ட ஏதாச்சும் இருக்கான்னு நாங்க செக் பண்ணுவோம்” என்று போலீசுக்கே அதிர்ச்சி கொடுத்துள்ளனர்.

வேறு வழியில்லாததால், சோதனையை நடத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்த போலீசார், ரவுடியின் குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்கள் முன்னிலையில் கைகளைத் தூக்கி தங்களைச் சோதனை செய்ய அனுமதித்துள்ளனர்.

ரவுடி குடும்பத்தினர் ஒவ்வொரு போலீசாரையும் சல்லடை போட்டு சோதனை செய்த பிறகே வீட்டிற்குள் அனுமதித்துள்ளனர். இந்த இடைவெளியைப் பயன்படுத்திக் கொண்ட ரவுடிகள் சோனு மற்றும் மோனு இருவரும் நைசாக அங்கிருந்து தப்பியோடிவிட்டனர்.

போலீசார் தங்களை ரவுடி குடும்பத்திடம் சோதனையிடக் கொடுத்த இந்த வினோத வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி ஒட்டுமொத்த பீகார் போலீஸ் துறையையே தலைகுனிய வைத்துள்ள நிலையில், இதுகுறித்து உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.