அசாம் மாநிலம் கவுகாத்தியில் சர்வதேச சந்தையில் சுமார் 3 கோடி ரூபாய் மதிப்புள்ள அரிய வகை ‘டோக்கேயி’ (Tokay Gecko) பல்லிகளைத் தந்திரமாக கடத்த முயன்ற கும்பலை காவல்துறையினர் கையும் களவுமாகப் பிடித்துள்ளனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் கவுகாத்தி போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், மூங்கில் கட்டைகளுக்குள் ரகசியமாக மறைத்து வைத்து கடத்தப்படவிருந்த 26 அரிய வகை டோக்கேயி பல்லிகள் பத்திரமாக மீட்கப்பட்டன.

இந்த கடத்தல் சம்பவத்தில் தொடர்புடைய 2 பேரை போலீசார் உடனடியாகக் கைது செய்து, மீட்கப்பட்ட பல்லிகள் அனைத்தையும் வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

மருத்துவக் குணங்கள் மற்றும் சர்வதேச கள்ளச்சந்தையில் இருக்கும் அதீத தேவையே இந்த பல்லிகள் கடத்தப்படுவதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் சர்வதேச கடத்தல் கும்பலுடன் தொடர்பு உள்ளதா என்ற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.