இந்தியாவில் வசித்து வரும் லிதுவேனியா நாட்டைச் சேர்ந்த மோனிகா குஞ்சேஸ்வரி தாசி என்ற பெண், மேற்கத்திய நாடுகள் இந்தியக் கலாச்சாரத்திலிருந்து கற்றுக் கொள்ள வேண்டிய 5 முக்கிய விஷயங்கள் குறித்து வெளியிட்டுள்ள வீடியோ சமூக வலைத்தளங்களில் இந்தியர்களின் நெஞ்சங்களைக் கவர்ந்து, பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் பல ஆண்டுகள் வாழ்ந்து வரும் மோனிகா, தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் இதுகுறித்த வீடியோ ஒன்றை எடிட் செய்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பியர்கள் இந்தியக் கிராமங்களைப் பார்த்து ‘சாதாரணமானவர்கள்’ என நினைக்கிறார்கள், ஆனால் மேற்கத்திய நாடுகள் மெல்ல மெல்ல இழந்து வரும் உன்னத மதிப்புகள் இந்தியர்களிடம் இன்னும் உயிர்ப்போடு உள்ளதாகக் கூறி 5 முக்கியப் பண்புகளைப் பட்டியலிட்டுள்ளார்.

இந்தியாவில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களை நடத்தும் விதம் அசாத்தியமானது. அவர்கள் வந்தவுடனே உணவு, தேநீர் கொடுத்து உபசரிப்பதை அடிப்படைப் பண்பாக வைத்திருக்கிறார்கள். இந்தியாவில் இது அடுத்த லெவலில் உள்ளது. இங்கு நண்பர்கள் நண்பர்களுக்கு உதவுகிறார்கள்; அண்டை வீட்டாரை எல்லோருக்கும் தெரிகிறது. யாராவது உதவி என்று கேட்டால் ஓடி வர இங்கு ஆட்கள் இருக்கிறார்கள். மேற்கத்திய நாடுகளில் தனிமை மற்றும் மன அழுத்தத்திற்கு அங்குள்ள கூட்டு வாழ்க்கை முறையின்மைதான் காரணம்.

இந்திய வீடுகளில் இன்றும் கைமுறை சமையல் மற்றும் குடும்பத்தினர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது இயல்பான ஒன்றாக உள்ளது. எல்லாவற்றையும் அவசரகதியிலும், வணிக ரீதியிலும் அணுகாமல் உணவிற்கு முக்கியத்துவம் தருகிறார்கள். இந்தியாவில் மக்கள் குளிப்பது, தூய்மையான ஆடைகளை உடுத்துவது எனத் தங்களைப் புத்துணர்ச்சியோடு வைத்துக் கொள்வதில் அதிகக் கவனம் செலுத்துகிறார்கள். இது மிகச் சிறந்த பழக்கம்.

திருவிழாக்கள், நடனம், பாட்டு என இந்தியர்கள் வாழ்வைக் கொண்டாடுகிறார்கள். மகிழ்ச்சியாக இருக்க அவர்களுக்குப் பெரிய காரணங்கள் தேவையில்லை. ஐரோப்பாவில் மக்கள் மிகவும் சீரியஸாக மாறிவிட்டதால், வாழ்க்கையை ரசிக்க மறந்துவிட்டனர். “நிச்சயமாக ஒவ்வொரு நாட்டிலும் நல்லது, கெட்டது என இரு பக்கங்கள் இருக்கும். ஆனால், இவை நான் தனிப்பட்ட முறையில் இந்தியாவிலிருந்து கற்றுக் கொண்ட நல்ல விஷயங்கள்” என்று மோனிகா அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, “இந்தியக் குடும்பங்களின் பாசத்தையும், கூட்டு வாழ்க்கையின் முக்கியத்துவத்தையும் ஒரு வெளிநாட்டுப் பெண் இவ்வளவு அழகாகப் புரிந்து வைத்துள்ளாரே!” என்று நெட்டிசன்கள் பலரும் தங்களது நெகிழ்ச்சியான கருத்துக்களைப் பகிர்ந்து பாராட்டி வருகின்றனர்.