கடந்த 2025 மே மாதம் இந்தியா – பாகிஸ்தான் இடையே நடைபெற்ற 4 நாள் ராணுவ மோதலில் இந்தியாவை வீழ்த்திவிட்டதாகப் பாகிஸ்தான் ராணுவத் தளபதி அசிம் முனீர் தொடர்ந்து பொய்ப் பிரசாரம் செய்து வரும் நிலையில், அவரது சொந்த நாட்டு ராணுவ முன்னாள் உயர் அதிகாரிகளே அதற்குப் பகிரங்கமாகக் கண்டனம் தெரிவித்து, உண்மையை உடைத்துள்ளனர்.

கடந்த 2025 ஏப்ரல் 22 அன்று காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பதிலடியாக, இந்திய ராணுவம் பாகிஸ்தான் ஆக்கிரமிப்புப் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களைக் குறிவைத்து ‘ஆபரேஷன் சிந்துார்’ என்ற பெயரில் வான்வழித் தாக்குதலை நடத்தியது. மே 7 முதல் 10 வரை நீடித்த இந்த 4 நாள் மோதலில் பாகிஸ்தானுக்குப் பலத்த சேதம் ஏற்பட்டது.

இருப்பினும், இந்தச் சம்பவம் நடந்து ஓராண்டு நிறைவடைந்ததைக் கொண்டாடும் வகையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெரீப் மற்றும் ராணுவத் தளபதி அசிம் முனீர் ஆகியோர், “நாங்கள் இந்தியாவிற்குப் பாடம் புகட்டிவிட்டோம், போரில் வெற்றி பெற்றுவிட்டோம்” என்று பாகிஸ்தான் மக்களுக்குப் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டு வந்தனர்.

ராணுவத் தளபதியின் இந்த வெற்றுப் பேச்சை பாகிஸ்தான் விமானப்படை முன்னாள் வைஸ் மார்ஷல் ஆபித் ராவ் கடுமையாகச் சாடியுள்ளார். தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “அசிம் முனீர் பெரிய பெரிய வார்த்தைகளைப் பேசுகிறார். இந்தியாவை மிரட்டிவிட்டதாகக் கூறும் அவர், நம் நாட்டின் பொருளாதார நிலை என்ன என்பதை விளக்க வேண்டும். நல்ல பொருளாதாரம் இல்லாத ராணுவ பலத்தால் எந்தப் பயனும் இல்லை.

 

பல வருடங்களாக நாம் ஒரு கடனை அடைக்க மற்றொரு நாட்டிடம் கடன் வாங்கிக் கொண்டிருக்கிறோம். நம் நாட்டின் நிலையை விளக்கும் ஒரு கார்ட்டூன் நினைவுக்கு வருகிறது; அதில் பாகிஸ்தானின் ஒரு கையில் அணுஆயுதமும், மறு கையில் பிச்சை பாத்திரமும்  இருக்கிறது” என்று நாட்டின் அவல நிலையைப் போட்டுடைத்தார்.

இதேபோல், பாகிஸ்தான் ராணுவத்தின் முன்னாள் கோர் கமாண்டர் லெப்டினன்ட் ஜெனரல் தாரிக் கானும் அசிம் முனிரின் வெற்றிக் கோஷங்களை நிராகரித்துள்ளார். “ஆபரேஷன் சிந்துார் போட்டியின் போது நாம் ஏதோ ஒரு வழியில் இந்தியாவை ஏமாற்றி தப்பித்திருக்கலாம், ஆனால் ஒவ்வொரு முறையும் அதிர்ஷ்டம் நம் பக்கம் இருக்காது. இந்தியாவை வென்றுவிட்டதாகக் கூறி நம் நாட்டு மக்களையே நாம் ஏமாற்றி வருகிறோம் என்று அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

போரின் போது பாகிஸ்தான் தரப்பில் கடுமையான சேதங்கள் ஏற்பட்டதற்கான செயற்கைக்கோள் புகைப்படங்கள் வெளியான நிலையிலும், இந்தியாவிற்கு எந்தப் பெரிய பாதிப்பும் ஏற்படவில்லை என்பதே உண்மை நிலவரம். தற்போது பாகிஸ்தான் தலைவர்களின் சுயதம்பட்டத்திற்கு அந்த நாட்டு ராணுவ முன்னாள் அதிகாரிகளே முற்றுப்புள்ளி வைத்துள்ள விவகாரம் சர்வதேச அரங்கில் பாகிஸ்தானிற்குப் பெரும் அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.