அமெரிக்காவைச் சேர்ந்த புரூக் நைஸ்லி என்ற பெண், கடுமையான விபத்து ஒன்றிற்குப் பிறகு 10 நாட்கள் கோமா நிலையில் இருந்து மீண்டபோது, தனது வாழ்க்கையில் நடந்த அதிர்ச்சிகரமான அனுபவத்தை வெளிப்படுத்தியுள்ளார். சுயநினைவு திரும்பியதும், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தன்னை புரூக்கின் காதலன் என்று கூறிக்கொண்டு அவருக்கு அருகில் இருந்துள்ளார்.
மேலும் விபத்தினால் ஏற்பட்ட ஞாபக மறதி மற்றும் பலவீனத்தை சாதகமாகப் பயன்படுத்தி, அந்த நபர் புரூக்கின் வாழ்க்கையில் ஊடுருவி, அவரைத் தன் காதலி என்று மற்றவர்களை நம்ப வைக்க முயன்றான். புரூக்கின் உடல்நலத்தைக் காட்டிலும் அவரது தோற்றத்தில் அதிக கவனம் செலுத்திய அந்த நபரின் நடவடிக்கைகள் அவருக்குள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
பின்னர், வெளிநாட்டிலிருந்து திரும்பிய புரூக்கின் தோழி ஒருவரால் அந்த நபரின் உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்தது. உண்மையில் அவன், புரூக்கின் தோழியை ஒரு வருடத்திற்கு முன்பு பாலியல் துன்புறுத்தல் செய்த நபர் என்பது தெரியவந்தது. மேலும், புரூக் கோமாவில் இருந்தபோது, அவர் உயிருக்குப் போராடிய சமயத்தில் லைஃப் சப்போர்ட்டை நீக்க அந்த நபர் பரிந்துரைத்ததும் தெரியவந்தபோது புரூக் கடும் அதிர்ச்சியடைந்தார்.
இந்தச் சம்பவத்திற்குப் பிறகு, அந்த நபருடனான உறவை முறித்துக்கொண்டு புரூக் துணிச்சலுடன் தன் வாழ்க்கையை மீட்டெடுத்தார். இக்கட்டான சூழலில் மற்றவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு ஒரு நபர் எவ்வளவு எளிதாக இரையாக நேரிடும் என்பதற்கு புரூக்கின் இந்த அனுபவம் ஒரு எச்சரிக்கையாக அமைந்தது.
