இணைய உலகில் கொஞ்ச நாள் வீடியோ போடவில்லை என்றாலே மக்கள் மறந்துவிடுவார்கள் என்ற கருத்தை சீனாவைச் சேர்ந்த பிரபல இன்ஃப்ளூயன்சர் ஜியாங் செங்லான் உடைத்தெறிந்துள்ளார்.

கடந்த மே 2023 முதல் எந்தப் புதிய வீடியோவும் போடாமல், கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகளாகச் சமூக ஊடகங்களில் இருந்து முற்றிலும் விலகியிருந்த ஜியாங், கடந்த மே 13 அன்று தனது உண்மையான பெயரிலேயே ஒரு புதிய கணக்கைத் தொடங்கி மீண்டும் என்ட்ரி கொடுத்துள்ளார்.

அவர் கணக்குத் தொடங்கிய வெறும் 24 மணி நேரத்திற்குள், கிட்டத்தட்ட 1 கோடி (10 மில்லியன்) மக்கள் அவரது புதிய கணக்கைப் பின்தொடர்ந்து சமூக ஊடக உலகையே ஸ்தம்பிக்க வைத்துள்ளனர். அவர் வெளியிட்ட எளிமையான மேக்கப் வீடியோவும்குறுகிய காலத்தில் 4.4 மில்லியனுக்கும் அதிகமான லைக்குகளைப் பெற்று இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. முன்னதாக ‘செங்ஷியன்’ என்ற பெயரில் 30 மில்லியன் ஃபாலோயர்களுடன் டாப் சேனல் நடத்திக் கொண்டிருந்த ஜியாங், திடீரென காணாமல் போனதற்கான மர்மத்தை இந்த வீடியோவில் உடைத்துள்ளார்.

தனது முன்னாள் நிறுவனத்தில் உடன் ஏற்பட்ட கடுமையான தகராறு காரணமாகவே தான் சமூக ஊடகங்களை விட்டு விலகியிருக்க வேண்டியிருந்தது என்று அவர் விளக்கியுள்ளார். பழைய பெயர் அந்த நிறுவனத்திற்குச் சொந்தமானது என்பதால், அதை முழுமையாகக் கைவிட்டுவிட்டுப் புதிய அடையாளத்துடன் வந்திருப்பதாகக் கூறினார்.

ஜியாங், பழைய பெயரில் விற்கப்படும் பொருட்களையோ அல்லது கடைகளையோ ரசிகர்கள் நம்ப வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார். இனி அழகு கலை மட்டுமல்லாமல், மோட்டிவேஷன் மற்றும் லைஃப்ஸ்டைல் வீடியோக்களையும் போடப்போவதாக அவர் அறிவித்திருப்பது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.