கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கிய வழித்தடமான ஹார்முஸ் ஜலசந்தியை அமெரிக்காவும் ஈரானும் மாறி மாறி முற்றுகையிட்டதால் உலகளாவிய எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தச் சூழலில் வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தங்களது கடற்படை முற்றுகையின் மூலம் ஹார்முஸ் ஜலசந்தி தற்போது அமெரிக்காவின் முழு கட்டுப்பாட்டில் உள்ளதாக அதிரடியாக அறிவித்துள்ளார்.

மேலும், ஈரான் வசம் உள்ள சுமார் 900 பவுண்டுகள் எடையுள்ள அதிக செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பை அமெரிக்கா மீட்டே தீரும் என்றும், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபட்டால் டெஹ்ரான் மீது கடுமையான ராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

சுமார் ஒருவருடத்திற்கு முன்பு நடந்த அமெரிக்க-இஸ்ரேல் வான்வழித் தாக்குதலுக்குப் பிறகு, ஈரான் நிலத்தடியில் மறைத்து வைத்துள்ளதாக நம்பப்படும் அணுப் பொருட்களைப் பெற்று அவற்றை முற்றிலும் அழிப்பதே தங்களின் நோக்கம் என்றும் ட்ரம்ப் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

ஈரானிடமிருந்து யுரேனியத்தை மீட்பதற்காக நடத்தப்படும் இந்த போரில், ஹார்முஸ் ஜலசந்தி முற்றுகையானது கப்பல் போக்குவரத்தைத் தடுக்கும் ஒரு ‘எஃகு சுவர்’ போல 100 சதவீதம் பலனளித்துள்ளதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம், இது சர்வதேச நீர்வழிப்பாதை என்பதால் எவ்வித சுங்கக் கட்டணமும் இன்றி கப்பல்கள் தடையின்றிச் செல்ல வேண்டும் என்றும் அவர் விரும்புகிறார்.

இதற்கிடையே, ஈரானில் சுத்திகரிக்கப்பட்டால் ஆயுதம் தயாரிக்கப் போதுமானதாகக் கருதப்படும் இந்த யுரேனியம் கையிருப்பு எக்காரணம் கொண்டும் நாட்டை விட்டு வெளியேறக் கூடாது என்று ஈரானின் உச்ச தலைவர் மொஜ்தபா கமேனி அதிரடி உத்தரவுபிறப்பித்துள்ளார். அமெரிக்காவின் அச்சுறுத்தலுக்குப் பணிய மறுக்கும் ஈரானின் இந்த பிடிவாதமான முடிவால், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மீண்டும் போர் பதற்றம் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது.