நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகியுள்ள ‘தேசி பிளிங்’ (Desi Bling) என்ற ரியாலிட்டி ஷோ, இணையத்தில் தற்போதைய மிகப்பொரிய விவாதப் பொருளாக மாறியுள்ளது. இந்த ஷோவில் பங்கேற்றுள்ள இந்திய-பிரிட்டிஷ் தொழிலதிபர் தம்பதியான சதீஷ் சம்பால் – தபிந்தா சம்பால் ஜோடியின் ஆடம்பர வாழ்க்கை முறை ஒட்டுமொத்த நெட்டிசன்களையும் வாயடைக்க வைத்துள்ளது. மத்தியப் பிரதேசத்தில் பிறந்து 8-ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துவிட்டு, வெறும் 80 ஆயிரம் ரூபாயுடன் துபாய் சென்று, இன்று பில்லியனராக உயர்ந்தவர் சதீஷ்.
இவர்களது பார்ட்டிகளில் பாலிவுட் பிரபலங்களே வந்து நடனமாடுவார்களாம். “பணம் கடவுள் இல்லை, ஆனால் அதற்கு குறைவானதும் இல்லை” என்று கூறும் இந்த தம்பதியின் 1 வயது மகளுக்கு, தனிப்பயனாக்கப்பட்ட (Customized) பிங்க் நிற ரோல்ஸ் ராய்ஸ் காரை பரிசாகக் கொடுத்து மிரள வைத்துள்ளனர். இந்நிலையில், இந்த ஷோவில் தபிந்தா சம்பால் உடைத்த ஒரு ரகசியம் தான் இப்போதைய நெட்டிசன்களின் ஏளனப் பேச்சுக்கு ஆளாகியுள்ளது. தன்னிடம் 40 கிலோ தங்கம் இருப்பதாகவும், கணவர் ஒவ்வொரு வருடமும் தனக்கு 3 கிலோ தங்கம் தருவதாகவும் கூறிய தபிந்தா, “மனைவி தினமும் கணவனின் காலைத் தொட்டு கும்பிட்டால் வீட்டில் லட்சுமி கடாட்சம் பெருகும்.
அதனால் என் கணவர் காலையில் எழுவதற்கு முன்பே 10-15 நிமிடங்கள் நான் அவருக்கு கால் மசாஜ் செய்வேன்; அவர் ஒரு இளவரசனைப் போலத்தான் கண் விழிக்க வேண்டும்” என்று கூறியுள்ளார். இந்த வீடியோ கிளிப் வைரலானதை அடுத்து, “இதெல்லாம் கேமராவுக்காகச் செய்யும் வெறும் நடிப்பு மற்றும் பந்தா” என்று நெட்டிசன்கள் இந்த ஜோடியை சமூக வலைதளங்களில் வச்சுச் செய்து கலாய்த்து வருகின்றனர்.
