மும்பையில் தென்மேற்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், மாநகராட்சி மேற்கொண்டு வரும் தூர்வாரும் பணிகளில் படுக்கைகள், சோபாக்கள், குளிர்சாதனப் பெட்டிகள் (ஃபிரிட்ஜ்) மற்றும் ஒரு முழு ஆட்டோ ரிக்‌ஷா உள்ளிட்டப் பொருட்கள் சாக்கடை கால்வாய்களில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பருவமழை காலங்களில் மும்பையில் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதைத் தடுப்பதற்காக, பிரஹன்மும்பை மாநகராட்சி ஆண்டுதோறும் மழைக்கு முன்னதாகவே பெரிய வடிகால்களை தூர்வாரும் பணிகளை மேற்கொள்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியின் போது, சாக்கடை மற்றும் கழிவுநீர் கால்வாய்களில் மக்கள் தூக்கி வீசிய கட்டில்கள், மெத்தைகள், மேஜைகள் மற்றும் ஃபிரிட்ஜ்கள் போன்ற பெரிய வீட்டு உபயோகப் பொருட்கள் கண்டெடுக்கப்பட்டு அகற்றப்பட்டன.

இதுமட்டுமன்றி, சாகி நகா காவல் நிலையத்திற்குச் சொந்தமான ஒரு போலீஸ் பேரிகார்டும் (தடுப்புக்கட்டை) சாக்கடையில் இருந்து மீட்கப்பட்டுள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக, நகரின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு பெரிய வடிகாலில் இருந்து, ஓரளவுக்கு சேதமடைந்த முழு ஆட்டோ ரிக்‌ஷா ஒன்றே வெளியே எடுக்கப்பட்டுள்ளது அதிகாரிகளை உறைந்து போகச் செய்துள்ளது. கடந்த ஆண்டுகளில் தென்னை மரக் கட்டைகள் கூட இதுபோன்று மீட்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மழைக்கால வெள்ள அபாயத்தைக் குறைக்க மாநகராட்சி நிர்வாகம் தற்போது போர்க்கால அடிப்படையில் பணிகளை முடுக்கிவிட்டுள்ளது. வெள்ள அபாயம் அதிகம் உள்ள பகுதிகளில், மாநகராட்சி கூடுதல் கமிஷனர் அபிஜித் பங்கார் புதன்கிழமை நேரில் சென்று ஆய்வு நடத்தினார். பணிகளை விரைந்து முடிக்கவும், தேங்கும் தண்ணீரை வெளியேற்றவும் அதிகாரிகளுக்கு அவர் சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார். இந்த கழிவுநீர் கால்வாய்கள் பலவும் இறுதியில் புகழ்பெற்ற மிதி  நதியில்தான் கலக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

நகரில் நிலவும் இந்த சட்டவிரோத குப்பை கொட்டும் கலாச்சாரம் மற்றும் பொதுமக்களின் பொறுப்பற்றத்தனமே இதற்கு முக்கியக் காரணம் என்று அதிகாரிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.  “தேவையற்ற பழைய வீட்டு உபயோகப் பொருட்களைப் பொது மக்கள் இப்படிப் பொதுக் கால்வாய்களில் வீசுவது, நகரின் ஒட்டுமொத்த வடிகால் அமைப்பையே முடக்கிவிடுகிறது. இதனால் கனமழை பெய்யும் போது தண்ணீர் வடிய வழியில்லாமல், மும்பையில் ஆண்டுதோறும் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படுகிறது. இது மக்களின் இயல்பு வாழ்க்கையைப் பாதிப்பதோடு, உயிர்ச் சேதங்களுக்கும் வழிவகுக்கிறது.

எனவே, பொதுமக்கள் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும் என்றும், வடிகால்களை குப்பைத் தொட்டியாகப் பயன்படுத்தக் கூடாது என்றும் மும்பை மாநகராட்சி நிர்வாகம் கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.