தமிழக எதிர்க்கட்சியான திமுகவில் உட்கட்சிப் பூசல் மற்றும் அதிருப்தி காரணமாக மிக முக்கிய விக்கெட் ஒன்று சரிந்துள்ளது. திமுகவின் பவர்ஃபுல் கோட்டையான திருப்பூர் மத்திய மாவட்டச் செயலாளராக இருந்த செல்வராஜ், கட்சியின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தான் அதிரடியாக விலகுவதாக அறிவித்து அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மாற்றுக்கட்சிகளில் இருந்து திமுகவிற்கு வந்த புதிய முகங்களுக்குக் கட்சியின் மிக முக்கியப் பொறுப்புகள் அள்ளிக் கொடுக்கப்படுவதால், தொண்டர்களுக்காக உழைத்த தனக்குக் கடும் வருத்தம் ஏற்பட்டுள்ளதாக ஓப்பனாகக் குற்றம் சாட்டியுள்ளார்.
கட்சியில் சீனியர்கள் மற்றும் விசுவாசிகளுக்கு முக்கியத்துவம் தராமல் புறக்கணிக்கப்படுவதாக எழுந்த ஆதங்கமே தனது இந்த திடீர் முடிவுக்குக் காரணம் என்று செல்வராஜ் விளக்கியுள்ளார். மேலும், “திமுகவில் இருந்து விலகினாலும், தற்போதைக்கு வேறு எந்தக் கட்சியிலும் இணையும் எண்ணம் தமக்கு இல்லை” என்றும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார். தவெக ஆளுங்கட்சியாகப் பொறுப்பேற்றுப் புயலாகக் கிளம்பியுள்ள இந்தச் சூழ்நிலையில், கொங்கு மண்டல திமுகவின் முக்கியத் தூணாக விளங்கிய மாவட்டச் செயலாளர் செல்வராஜின் இந்த அதிரடி விலகல், திமுக தலைமைக்கு மிகப்பெரிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
