உத்தரப் பிரதேச மாநிலத்தில், சட்டம் பயிலும் கல்லூரி மாணவி ஒருவருக்கு நீதிமன்றத்தில் அறை வாங்கித் தருவதாகவும், சட்டப் பயிற்சியில் உதவுவதாகவும் கூறி இந்து யுவ வாஹினி அமைப்பின் முன்னாள் தலைவரான சுஷில் பிரஜாபதி பழகியுள்ளார். பின்னர், அந்த மாணவியை ஒரு ஃபிளாட்டிற்கு அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்துப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, இதுகுறித்து வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார். பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில்  காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

தலைமறைவாக இருந்த சுஷில் பிரஜாபதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்து, அவருக்கு 25,000 ரூபாய் வெகுமதியும்அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 11, 2025 அன்று அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அடைக்கப்பட்ட சுஷில் பிரஜாபதி, கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கடந்த மே 17 அன்று ஜாமினில் விடுவிக்கப்பட்டார். அவர் சிறையிலிருந்து வெளியே வந்தவுடன், நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் சிறை வாசலிலேயே அவருக்குப் பூமாலைகள் அணிவித்து, தோள்களில் சுமந்து தியாகியைப் போல உற்சாகமாக வரவேற்றனர்.

மேலும், வாகனங்களின் அணிவகுப்புடன் பலத்த கோஷங்களை எழுப்பியவாறே அவரை ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். இதுதொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி, குற்ற வழக்கில் தொடர்புடைய ஒருவருக்கு இத்தகைய வரவேற்பு அளிக்கப்பட்டதற்குப் பல்வேறு தரப்பினரும் தங்களது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.