இந்தியாவில் விவசாயிகள், தொழிலாளர்கள், வியாபாரிகள் என ஒட்டுமொத்த மக்களும் கடுமையான பொருளாதார சுமையால் பெரும் துயரத்தைச் சந்தித்து வருகிறார்கள். நாட்டில் இப்படி ஒரு பொருளாதார புயல் வீசிக் கொண்டிருக்கும் போது, நமது பிரதமர் நரேந்திர மோடி இத்தாலி பிரதமருடன் சிரித்துப் பேசி ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் போடுவதிலும், ‘மெலடி’ மிட்டாய் சாப்பிடுவதிலும் பிஸியாக இருக்கிறார்.

இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, பிரதமர் மோடியுடன் இருக்கும் வீடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, மோடி தங்களுக்கு ஒரு நல்ல மிட்டாய் பரிசளித்ததாகப் பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவைச் சுட்டிக்காட்டி மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தனது எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் பிரதமர் மோடியைக் கடுமையாகச் சாடியுள்ளார்.

நாட்டின் இளைஞர்கள் வேலைவாய்ப்பு இல்லாமல் மன அழுத்தத்தில் இருக்கும் போது, பிரதமர் இப்படி விளம்பர அரசியல் செய்வது தலைமைப் பண்பு கிடையாது என்றும், பா.ஜ.க.வினர் இதற்கு கைதட்டி மகிழ்வது வேதனையானது என்றும் ராகுல் காந்தி தனது விமர்சனத்தில் காட்டமாகத் தெரிவித்துள்ளார்.