தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவிமோகன், தனது மனைவி ஆர்த்தியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வருகிறார். இவர்களின் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், இவர்களது குடும்பப் பிரச்சனைக்கு பின்னணி பாடகி கெனிஷாதான் காரணம் என்று சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ரவிமோகன், சமீபத்தில் சென்னையில் உள்ள தனது ஸ்டுடியோவில் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக அமைதியாக இருந்ததாகவும், இனி தன்னை யாராவது சீண்டினால் சும்மா இருக்க மாட்டேன் என்றும் ஆக்ரோஷமாகத் தெரிவித்தார். மேலும், தனக்கு நிம்மதியாக நடிக்க முடியவில்லை என்றும், விவாகரத்து கிடைக்கும் வரை இனிமேல் படங்களில் நடிக்கப் போவதில்லை என்றும், தனது திரைப்படங்கள் திரைக்கு வராது என்றும் கண்ணீர் மல்கக் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த இக்கட்டான சூழ்நிலையிலும், மன உளைச்சலிலும் இருந்து விடுபட நடிகர் ரவிமோகன் தற்போது ஆன்மிக பாதையைத் தேர்ந்தெடுத்துள்ளார். அவர் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்குச் செல்வதற்காக புனித மாலை அணிந்து, கடும் விரதத்தைத் தொடங்கியுள்ளார். அவர் ஏற்கனவே செய்தியாளர் சந்திப்பில் கூறியிருந்தபடி, தற்காலிகமாக நடிப்பிலிருந்து விலகி ஆன்மிகப் பயணத்தில் முழுமையாக ஈடுபட்டுள்ளதை அறிந்த அவரது ரசிகர்கள் மற்றும் இணையவாசிகள், அவருக்கு ஆதரவாகப் பல்வேறு கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
