ஒடிசா மாநிலம் பிரம்மபூர் நகரில், மக்கள் நடமாட்டம் மிகுந்த பொதுவழியில்  காதல் ஜோடியை  மூங்கில் தடிகளால் ஒரு கும்பல் கொடூரமாகத் தாக்கிய சம்பவம்  பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

ஒடிசாவின் பிரம்மபூர் நகரின் மையப்பகுதியில் இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. சாலையில் சென்றுகொண்டிருந்த இளம் தம்பதியை வழிமறித்த இரு இளைஞர்கள், தங்களது கைகளில் வைத்திருந்த தடிமனான மூங்கில் கம்புகளால் அவர்களை இரக்கமின்றி சராமாரியாகத் தாக்கினர். தடியடி தாங்க முடியாமல் அந்த ஜோடி அலறியும், தாக்குதல் நடத்தியவர்கள் தொடர்ந்து சாமாரியாக அடித்தனர்.

 

இந்தக் கொடூரச் சம்பவம் நடுரோட்டில் நடந்துகொண்டிருந்தபோது, அந்த வழியாகச் சென்ற ஏராளமான பாதசாரிகளும் வாகன ஓட்டிகளும் அதைக் கண்டு கொள்ளாமல், தங்களது வாகனங்களை நிறுத்தாமல் வேடிக்கை பார்த்தபடி சென்றனர். யாரும் உடனடியாக அவர்களைக் காப்பாற்ற முன்வரவில்லை. பின்னர், அங்கிருந்த சில தைரியமான பயணிகள் தலையிட்டு அந்தத் தாக்குதலைத் தடுத்து நிறுத்தினர்.

இந்தத் தாக்குதலில் படுகாயமடைந்த அந்த ஜோடி, உடனடியாக மீட்கப்பட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், தற்போது அவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த வன்முறை சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர். சமூக வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ ஆதாரங்களைக் கைப்பற்றி, தாக்குதல் நடத்திய நபர்களை அடையாளம் காணும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

முன்விரோதம் அல்லது தனிப்பட்ட பகை காரணமாக இந்தத் தாக்குதல் நடந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் சந்தேகிக்கப்படுகிறது. மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் நடந்த இந்த வன்முறைச் சம்பவம், நகரின் சட்டம் ஒழுங்கு மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துக் கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது. மேலும் குற்றவாளிகள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.