கடந்த பிப்ரவரி 28 அன்று ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் நடத்திய அதிரடித் தாக்குதலில், அந்த நாட்டு உச்சபட்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி மற்றும் மூத்த தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து சுமார் 40 நாட்கள் நீடித்த போர் தற்போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அங்கு நிரந்தர அமைதியை ஏற்படுத்துவதற்காகப் பாகிஸ்தானின் மத்தியஸ்தத்தில் பேச்சுவார்த்தைகள் நடந்து வந்தாலும், ஈரானின் கடற்பகுதி முற்றுகை மற்றும் ஹார்முஸ் நீரிணை மூடல் போன்ற முக்கியப் பிரச்சினைகளால் இன்னும் அமைதி ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதனால் வளைகுடா பகுதியில்தொடர்ந்து உச்சக்கட்ட பதற்றம் நீடித்து வருகிறது.

இந்தச் சூழ்நிலைக்கு மத்தியில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ‘ட்ரூத் சோஷியல்’ பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியுள்ளது. “ஈரானைப் பொறுத்தவரை நேரம் ஓடிக்கொண்டிருக்கிறது; அவர்கள் விரைந்து செயல்படுவது நல்லது, இல்லையெனில் அவர்களைப் பற்றிய அடையாளமே உலக வரைபடத்தில் இருக்காது” என்று டிரம்ப் அதிரடியாக எச்சரித்துள்ளார்.

அத்துடன், ஈரானைச்சுற்றியுள்ள பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகள் தங்களின் ஆதரவு நாடுகள் என்பதைக் குறிக்கும் வகையில் அமெரிக்கக் கொடி வர்ணத்தில் உலக வரைபடப் புகைப்படம் ஒன்றையும் அவர் பகிர்ந்துள்ளார்.

மேலும், அமெரிக்கக் கடற்படை கப்பலில் இருப்பது போன்ற ஏஐ புகைப்படத்தை வெளியிட்டு, “இது புயலுக்கு முந்தைய அமைதி” என்று டிரம்ப் பதிவிட்டுள்ளதால், ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் ஒரு பிரம்மாண்ட தாக்குதலுக்குத் தயாராகி வருகிறதோ என்ற அச்சம் உலக நாடுகளிடையே தொற்றிக்கொண்டுள்ளது.