தமிழக முதலமைச்சர் விஜய் அவர்களை, பிரபல திரைப்பட இயக்குனர் வெங்கட் பிரபு நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அவர் இயக்கிய ‘GOAT’ திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட சிறப்பு கார் நம்பர் பிளேட்டை முதலமைச்சருக்கு நினைவுப் பரிசாக வழங்கினார்.
கடந்த 2024-ஆம் ஆண்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில், நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற திரைப்படம் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (GOAT). இத்திரைப்படத்தின் ஒரு காட்சியில் ‘TN07CM2026’ என்ற எண் கொண்ட கார் நம்பர் பிளேட் பயன்படுத்தப்பட்டிருந்தது.
அப்போதே இந்த எண், நடிகர் விஜய் அவர்களின் அரசியல் வருகையையும், 2026-ஆம் ஆண்டு அவர் முதலமைச்சராவதையும் மறைமுகமாகக் குறிப்பிடும் வகையில் வைக்கப்பட்டதாக அவரது ரசிகர்களால் சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டது.
தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் அவர்கள் பொறுப்பேற்றுள்ள நிலையில், இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் அவரது குழுவினர் முதலமைச்சரை நேரில் சந்தித்தனர். இந்தச் சந்திப்பின் போது, திரைப்படத்தில் இடம்பெற்ற அதே ‘TN07CM2026’ என்ற எண் கொண்ட நம்பர் பிளேட்டை நேர்த்தியாக பிரேம் செய்து, ‘The First Manifestation by VP & Team’ என்ற வாசகத்துடன் முதலமைச்சருக்கு நெகிழ்ச்சியோடு பரிசளித்தனர்.
மேலும் திரைப்படத்தில் கணிக்கப்பட்ட விஷயம் நிஜத்தில் சாத்தியமாகியுள்ளதை உணர்த்தும் வகையில் அமைந்த இந்தச் சந்திப்பின் புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
