இயக்குநர் சாய் ரமணி இயக்கத்தில், நடிகர் ஜீவா இரட்டை வேடங்களில் நடித்து கடந்த 2011-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘சிங்கம்புலி’. ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பைப் பெற்ற இந்தத் திரைப்படத்தில், ஒரு ஜீவா ஹீரோவாகவும், மற்றொரு ஜீவா பெண்களை ஏமாற்றி உல்லாசமாகத் திரியும் வில்லனாகவும் நடித்திருந்தனர். இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்ற ஒரு குறிப்பிட்ட சர்ச்சை காட்சி குறித்து அதில் நடித்த பிரபல அம்மா நடிகை சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்று சமூக வலைத்தளங்களில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.

இப்படத்தில் வில்லன் ஜீவா, ஒரு இளம் பெண்ணை மட்டுமின்றி அவரது அம்மாவையும் ஏமாற்றுவது போன்ற ஒரு முகம் சுளிக்க வைக்கும் காட்சி அமைக்கப்பட்டிருக்கும். இக்காட்சியில் நடித்த அம்மா நடிகை, அண்மையில் ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்தார்.

அப்போது அவர் பேசுகையில், “அந்தப் படத்தில் நான் ஏன் அந்த காட்சியில் நடித்தேன் என்றே எனக்குத் தெரியவில்லை. படப்பிடிப்பின் போது என்னிடம் வேறு ஏதோ கதையைக் கூறித்தான் அந்தக் காட்சியை எடுத்தார்கள். எனக்கு அப்போது எதுவும் புரியவில்லை. ஆனால், படம் திரைக்கு வந்தபோது அந்த காட்சி முற்றிலும் வேறுவிதமாக, தவறான அர்த்தத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.

மேலும் தனது மன உளைச்சல் குறித்துப் பேசிய அவர், “படத்தில் அந்த காட்சி வெளியானதும் எனது குடும்பத்தினர் அனைவரும் என்னைக் கடுமையாகத் திட்டினார்கள். இதனால் எனக்குப் பலத்த மன உளைச்சல் ஏற்பட்டது. அதன் பிறகு என்னால் நிம்மதியாகத் தூங்கக்கூட முடியவில்லை. சினிமா உலகை விட்டே விலகிவிடலாமா, இனி நடிக்கலாமா வேண்டாமா என்ற சூழ்நிலைக்கே நான் தள்ளப்பட்டேன் என்று கண்ணீருடன் தெரிவித்துள்ளார்.

பல ஆண்டுகள் கழித்து ‘சிங்கம்புலி’ படக் காட்சி குறித்து அந்த நடிகை வெளியிட்டுள்ள இந்த அதிர்ச்சித் தகவல், தற்போது கோலிவுட் வட்டாரத்திலும் இணையத்திலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.