கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சிரா தாலுகாவில் உள்ள நிம்பேமரதஹள்ளி கிராமத்தில், பெற்ற மகளையே தந்தை கொடூரமாகக் கொலை செய்த அதிர்ச்சிச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இக்கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான திம்மராயப்பா என்பவரது 17 வயது மகள் மேகனா, தனது தாயின் உறவினரான மின்சாரப் பணியாளர் ஒருவரைக் காதலித்து வந்துள்ளார்.
இந்தத் திருமண வரனுக்கு திம்மராயப்பாவின் மனைவி நிர்மலா ஆதரவு தெரிவித்த நிலையில், திம்மராயப்பா கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளார். இதனால் குடும்பத்தில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. கடந்த ஏப்ரல் 16 அன்று, தனது விவசாய நிலத்திற்கு மகளை வரவழைத்த திம்மராயப்பா, அங்கு அவளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆத்திரத்தின் உச்சக்கட்டத்திற்குச் சென்ற அவர், மகளைக் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, சடலத்தை அங்கிருந்த விவசாயக் கிணற்றில் வீசியுள்ளார்.
பின்னர் கிணற்றிலிருந்து உடல் மேலே மிதந்துவிடும் என்று அஞ்சிய திம்மராயப்பா, அன்றிரவே சடலத்தை வெளியில் எடுத்து, அருகில் உள்ள காய்ந்த ஏரிப் படுகைக்குக் கொண்டு சென்று ரகசியமாகப் புதைத்துள்ளார். மறுநாள் தனது மகள் காணாமல் போய்விட்டதாக மனைவியுடன் சேர்ந்து காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டு, ஒரு வாரம் கழித்து அவரும் தலைமறைவாகியுள்ளார்.
இதனால் காவல் துறையினர் நடத்திய தீவிரத் தேடுதல் வேட்டையில், மே 15 அன்று அவர் தனது கிராமத்திற்கு அருகே பிடிபட்டார். தொடக்கத்தில் தனக்கு எதுவும் தெரியாது என்று நாடகமாடிய திம்மராயப்பா, போலீஸாரின் தீவிர விசாரணையின் போது தனது கொடூரக் குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து, அவர் அடையாளம் காட்டிய இடத்திலிருந்து சிறுமியின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டதுடன், குற்றவாளியான தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
