ராஜஸ்தான் மாநிலத்தின் முதன்மையான பயிற்சி மைய மையமாகத் திகழும் சீகாரில், கடந்த மே 3ஆம் தேதி நீட் தேர்வு முடிந்த அன்று இரவு வேதியியல் ஆசிரியர் சஷிகாந்த் சுதாரின் மொபைல் போனுக்கு ஒரு மர்மமான பிடிஎஃப் கோப்பு வந்துள்ளது. வினாத்தாள் கசிந்துள்ளதாகக் கூறப்பட்ட அந்த ஆவணத்தை, அன்றைய தேர்வின் அசல் வினாத்தாளுடன் அவரும் அவரது நண்பரும் விடிய விடிய ஒப்பிட்டுப் பார்த்தபோது அதிர்ச்சியூட்டும் உண்மை வெளிவந்தது.
மேலும் தேர்வு நடப்பதற்கு முன்பே வினாக்கள் அனைத்தும் வரிக்கு வரி அப்படியே கசிந்திருந்ததைக் கண்டறிந்த அவர், ஏழை மற்றும் நடுத்தரக் குடும்பங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாப்பதற்காக உடனடியாக களத்தில் இறங்கினார். மே 4ஆம் தேதி காவல்துறையை அணுகியபோது கூடுதல் ஆதாரம் கேட்கப்பட்டதால், சோர்வடையாமல் வலுவான ஆதாரங்களைத் திரட்டி, மே 6 அன்று தேசிய தேர்வு முகமை மற்றும் சிபிஐ ஆகியவற்றுக்கு மின்னஞ்சல் மூலம் புகாரை அனுப்பினார்.
இதனால் ஆசிரியர் சஷிகாந்தின் இந்த அதிரடி மற்றும் துணிச்சலான முயற்சியால், மே 7ஆம் தேதி உள்துறை அமைச்சகத்தின் உயர் அதிகாரிகள் இந்த விவகாரத்தில் நேரடியாக தலையிட்டனர். இதன் விளைவாக, பெரும் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு புகார்கள் உறுதி செய்யப்பட்டு, இறுதியாக மே 12 அன்று நீட்-யுஜி 2026 தேர்வை முற்றிலும் ரத்து செய்வதாக என்டிஏ அறிவித்தது.
இந்நிலையில் நிலத்தை அடமானம் வைத்தும், கடன் வாங்கியும் தங்களது பிள்ளைகளை மருத்துவர்களாக்கப் போராடும் ஏழைத் தொழிலாளர்களின் உழைப்பு வீணாகிவிடக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில், உயிருக்கு ஆபத்தான இந்த சவாலை அவர் எதிர்கொண்டார். ஒரு சாதாரண ஆசிரியரின் விழிப்புணர்வும், விடாமுயற்சியும் இன்று நாட்டின் மிகப்பெரிய தேர்வு மாஃபியாவின் முகத்திரையைக் கிழித்து, நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான நேர்மையான மாணவர்களின் மருத்துவக் கனவுக்குப் புதிய நீதியையும் நம்பிக்கையையும் பெற்றுத் தந்துள்ளது.
