உத்தர பிரதேச மாநிலத்தை சேர்ந்த அமீனா (31) என்ற கர்ப்பிணிப் பெண், உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இவருக்குக் கடந்த மே 9-ஆம் தேதி முதலாவது குழந்தை பிறந்தது. பொதுவாக நான்கு குழந்தைகள் ஒரே பிரசவத்தில் பிறக்கும் போது ஆபத்துகளைத் தவிர்க்க அறுவை சிகிச்சை முறையே தேர்வு செய்யப்படும். ஆனால், அமீனாவைத் தொடர்ந்து தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைத்திருந்த மருத்துவர்கள், மே 14-ஆம் தேதி மீதமுள்ள மூன்று குழந்தைகளையும் எவ்வித அறுவை சிகிச்சையும் இன்றி சுகப்பிரசவம் மூலமாகவே பிரசவிக்கச் செய்து சாதனை படைத்துள்ளனர்.
5 நாட்கள் இடைவெளியில் நான்கு குழந்தைகளும் இயற்கையான முறையில் பிறந்தது ஒட்டுமொத்த மருத்துவ உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது. இந்த அரிய பிரசவம் குறித்து மருத்துவர்கள் கூறுகையில், அமீனாவின் கர்ப்ப காலம் ஆரம்பத்திலிருந்தே அதிக ஆபத்துகள் நிறைந்ததாக இருந்ததாகத் தெரிவித்துள்ளனர். அவருக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் கல்லீரல் தொடர்பான தீவிர பாதிப்புகள் இருந்ததால், மருத்துவக் குழுவினர் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட்டுள்ளனர்.
மேலும், இந்த நான்கு குழந்தைகளும் தாயின் வயிற்றில் தனித்தனி பனிக்குடங்களில் வளர்ந்திருந்தது தான் இந்த வழக்கின் மிக முக்கிய அம்சம் என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். சவால்கள் நிறைந்த இந்த பிரசவத்தை மருத்துவக் குழுவினர் தங்களின் ஒருங்கிணைந்த முயற்சியால் வெற்றிகரமாக முடித்துள்ள நிலையில், தற்போது தாயும் நான்கு குழந்தைகளும் முற்றிலும் நலமுடன் இருப்பதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.
