சீனக் குழந்தை ஒன்றிடம் பாகிஸ்தான் சுற்றுலாப் பயணிகள் பேச முயன்றபோது, அக்குழந்தை மழலை மொழியில் நறுக்கென்று கொடுத்த பதில்கள் தற்போது சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாகப் பரவி, பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிரப்பட்ட இந்த வீடியோவில், பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்கள் சிலர் அந்தச் சீனக் குழந்தையிடம் நட்புடன் பேச முயல்கின்றனர். தங்களை அறிமுகப்படுத்திக் கொண்ட அந்தப் பெண்கள், “நாங்கள் பாகிஸ்தானில் இருந்து வருகிறோம். பாகிஸ்தானும் சீனாவும் மிகச் சிறந்த நண்பர்கள் என்று உனக்குத் தெரியும்தானே?” என்று கேட்கின்றனர்.
சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளுக்கு இடையே உள்ள தூதரக மற்றும் அரசியல் நட்புறவை மனதில் வைத்து அக்குழந்தையிடம் அவர்கள் பேசினர். ஆனால், அக்குழந்தையோ எந்தத் தயக்கமும் இன்றி, “எனக்கு பாகிஸ்தானைத் தெரியாது” என்று மழலை மொழியில் பதிலளித்தது. இதனால் அந்தப் பெண்கள் சில நொடிகள் தர்மசங்கடத்திற்கு உள்ளாகி, அதிர்ச்சியடைந்தனர்.
இருப்பினும், உரையாடலைத் தொடர விரும்பிய அவர்கள், “பரவாயில்லை… உனக்கு ஏன் தெரியவில்லை? பாகிஸ்தானும் சீனாவும் நல்ல நண்பர்கள்” என்று மீண்டும் மீண்டும் வற்புறுத்திக் கூறினர். அதற்கு அக்குழந்தை மிகவும் அமைதியாகவும், நாகரீகமாகவும், “நான் சீனாவைச் சேர்ந்தவள். சீனாவிற்கு உங்களை வரவேற்கிறேன்” என்று கூறி பேச்சைத் திசைதிருப்பியது.
அதனைத் தொடர்ந்து அக்குழந்தை பேசிய மற்றொரு விஷயம் இணையத்தில் பெரும் விவாதப் பொருளாக மாறியுள்ளது. அந்தப் பெண்களைப் பார்த்து, “ஆனால், நீங்கள் மூன்று பேரும் கொஞ்சம் சத்தமாகப் பேசுகிறீர்கள். கொஞ்சம் மெதுவாகப் பேசலாமே?” என்று அக்குழந்தை மழலைத் தொனியில் சுட்டிக்காட்டியது. இதனால் அந்தப் பெண்கள் லேசாக அசடு வழிந்தாலும், “நீ மிகவும் இனிமையானவள், உனது பெயரும் அழகாக இருக்கிறது” என்று கூறி விடைபெற்றனர்.
இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பாகிஸ்தானைக் கடுமையாகக் கேலி செய்து வருகின்றனர். “சர்வதேச அளவில் பாகிஸ்தானை ஒரு குழந்தையே அசிங்கப்படுத்திவிட்டது” என்று ஒரு பயனர் கமெண்ட் செய்துள்ளார். மற்றொருவரோ, “சீனாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருப்பது நட்பு அல்ல, அது எஜமானன் மற்றும் வேலைக்காரன் போன்ற உறவு” என்று சாடியுள்ளார்.
அதே நேரத்தில், “இரண்டு வயதுக் குழந்தைக்கு சர்வதேச அரசியல் எப்படித் தெரியும்? பாகிஸ்தான் எப்போதுமே சத்தமாகத்தான் பேசும்” என்று குழந்தைக்கு ஆதரவாகவும், பாகிஸ்தானுக்கு எதிராகவும் இணையவாசிகள் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
