மத்தியப் பிரதேச மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலைய லாக்-அப்பிற்குள் (சிறைக்கூண்டு) சேவல் ஒன்று உலா வரும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி, நெட்டிசன்களிடையே பெரும் விவாதத்தையும் நகைச்சுவையையும் கிளப்பியுள்ளது.
சத்தர்பூர் மாவட்டம், அத்கோஹா போலீஸ் சவ்கி பகுதியில் இந்த விசித்திரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள லாக்-அப் கம்பிகளுக்குப் பின்னால் ஒரு சேவல் அமைதியாக அங்கும் இங்கும் நடந்து திரிவதையும், வெளியில் வர வழி தேடுவதையும் ஒருவர் தனது மொபைல் போனில் வீடியோவாகப் பதிவு செய்துள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் காட்டுத்தீயாகப் பரவியதைத் தொடர்ந்து, நெட்டிசன்கள் பல்வேறு விதமான கருத்துக்களையும் மீம்ஸ்களையும் பகிர்ந்து வருகின்றனர். “போலீஸார் இரவு நேர ‘சிக்கன் பார்ட்டி’ கொண்டாடுவதற்காகத்தான் அந்தச் சேவலைப் பிடித்து லாக்-அப்பில் அடைத்து வைத்துள்ளனர்” என்று சிலர் கிண்டலாகக் குற்றம் சாட்டத் தொடங்கினர். மேலும் சிலர், “வெளியே நிலவும் கடுமையான வெயிலைத் தாங்க முடியாமல், காவல் நிலையத்தின் குளுமையான பகுதிக்குள் சேவல் தஞ்சம் புகுந்துள்ளது” என்றும் கலகலப்பாகப் பதிவிட்டு வந்தனர்.
मध्य प्रदेश के छतरपुर से एक बेहद अजीब मामला सामने आया है। अटकौहां पुलिस चौकी के लॉकअप में किसी आरोपी की जगह एक मुर्गा बंद मिला, जिसका वीडियो सोशल मीडिया पर तेजी से वायरल हो रहा है। पुरुष बंदी गृह में मुर्गे को देखकर लोग हैरानी जता रहे हैं और वीडियो जमकर चर्चा में बना हुआ है।… pic.twitter.com/Z7vGR3Kz2B
— INH 24X7 (@inhnewsindia) May 15, 2026
இந்த விவகாரம் மாவட்டத்தில் பெரும் பேசுபொருளாக மாறியதை அடுத்து, லவ்குஷ்நகர் எஸ்டிஓபி (SDOP) நவீன் துபே இந்தச் சம்பவம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் அளித்துள்ளார். ‘சிக்கன் பார்ட்டி’ வதந்திகளை முற்றிலுமாக மறுத்த அவர் கூறியதாவது, காவல் நிலைய அவுட்போஸ்டில் தூய்மைப் பணிகள் நடந்து கொண்டிருந்த போது, எதிர்பாராதவிதமாக இந்தச் சேவல் தானாகவே லாக்-அப்பிற்குள் நுழைந்துவிட்டது. இதைக் கவனித்த தூய்மைப் பணியாளர், விளையாட்டுத் தனமாக லாக்-அப் கதவை மூடி, அந்தச் சேவலை வீடியோ எடுத்துள்ளார். இதில் சொல்வதற்கோ, சந்தேகப்படுவதற்கோ வேறு எந்த உண்மையும் இல்லை. பார்ட்டி வைப்பதற்காகச் சேவல் அடைக்கப்பட்டதாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் வதந்தியானவை என்று அவர் தெளிவுபடுத்தினார்.
இருப்பினும், இந்தச் சம்பவம் குறித்து அந்த அவுட்போஸ்ட் பொறுப்பாளர் சோஹன் சிங் மற்றும் லவ்குஷ்நகர் காவல் நிலைய ஆய்வாளர் அஜய் அம்பே ஆகியோர் இதுவரை கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. காவல்துறையின் விளக்கத்திற்குப் பிறகும், இந்த வினோதமான வீடியோ இணையத்தில் தொடர்ந்து லட்சக்கணக்கான பார்வைகளைக் கடந்து வைரலாகி வருகிறது.
