சென்னை நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்த 70 வயது முதியவர் ஒருவர், தன் மகளுடன் வசித்து வருகிறார். தற்போது கோடை விடுமுறையை முன்னிட்டு, கடந்த வாரம் முதியவரின் மகள் வீட்டைப் பூட்டிவிட்டு வெளியூருக்குச் சென்றுள்ளார்.
இதனால் முதியவர் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இந்தச் சூழ்நிலையைப் பயன்படுத்திக் கொண்ட அவர், தனக்கு ஏற்கனவே பழக்கமான 38 வயது இளம்பெண் ஒருவரைத் தனது வீட்டிற்கு வரவழைத்துள்ளார். அந்தப் பெண் அப்பகுதியில் பூ வியாபாரம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இருவரும் வீட்டில் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
வெளியூர் சென்றிருந்த மகள் திடீரென வீடு திரும்பியபோது, வீட்டில் மர்மப் பெண் ஒருவர் இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனது தந்தையிடம் அவர் விசாரித்தபோது, வீட்டு வேலைகளைச் செய்வதற்காக அந்தப் பெண்ணை வரவழைத்திருப்பதாகக் கூறி முதியவர் சமாளித்துள்ளார்.
இதற்கிடையில், அந்தப் பெண் சென்ற பிறகு வீட்டில் இருந்த தங்க நகைகள் காணாமல் போயிருப்பது கண்டு மகள் அதிர்ச்சியடைந்தார். தந்தை வீட்டில் தனியாக இருந்ததைச் சாதகமாக்கிக் கொண்டு, அந்தப் பெண் நகைகளைத் திருடிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை நடத்தி நகைகளைத் திருடிச் சென்ற பூ வியாபாரி இளம்பெண்ணைக் கைது செய்தனர். குடியிருப்புப் பகுதியில் முதியவரை ஏமாற்றி நகை திருடப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
