கிருஷ்ணகிரி அருகே ஒன்பதாம் வகுப்பு மாணவி ஒருவரின் புகைப்படங்களை ஆபாசமாகச் சித்திரவதை செய்து, அவரிடமிருந்து நிர்வாண வீடியோவைப் பெற்று, அவரது தந்தையிடம் 10 லட்சம் ரூபாய் கேட்டு மிரட்டிய மூன்று பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பாதிக்கப்பட்ட மாணவியின் பக்கத்து வீட்டில் வசித்து வந்த மாணவன் மற்றும் அவனது நண்பர்கள் இருவர் இணைந்து, இன்ஸ்டாகிராம் மூலம் போலி கணக்கை உருவாக்கி மாணவியைத் தொடர்பு கொண்டுள்ளனர்.

மேலும் பின்னர் மாணவியின் புகைப்படங்களை ஆபாசமாக மார்பிங் செய்து காட்டி மிரட்டிய அவர்கள், அந்தப் படங்கள் சமூக வலைதளங்களில் பரவாமல் இருக்க வேண்டுமென்றால் மாணவியைத் தனது நிர்வாண வீடியோவை அனுப்பச் சொல்லி கட்டாயப்படுத்தியுள்ளனர்.

இதனால் பயந்துபோன மாணவி அவர்கள் கேட்டபடி வீடியோவை அனுப்பிய நிலையில், அந்த மாணவர்கள் மாணவியின் தந்தையின் வாட்ஸ்-அப் எண்ணிற்கு அந்த வீடியோவை அனுப்பி 10 லட்சம் ரூபாய் பணம் கேட்டு மிரட்டல் விடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த மாணவியின் தந்தை, அந்த செல்போன் எண் பக்கத்து வீட்டு மாணவருடையது என்பதைக் கண்டறிந்து உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் கிருஷ்ணகிரி அனைத்து மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில் குற்றச்சாட்டுகள் உறுதி செய்யப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட மூன்று மாணவர்களும் கைது செய்யப்பட்டு சேலம் கூர்நோக்கு மையத்தில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.