ஆந்திரப் பிரதேசத்தில் எரிபொருள் சிக்கனத்தை வலியுறுத்தும் வகையில், ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமையை ‘வாகனமில்லா தினமாக’ கடைப்பிடிக்க முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ள சூழலில், ‘என் நாடு, என் பொறுப்பு’ என்ற புதிய திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தின்படி, வெள்ளிக்கிழமை அன்று அமைச்சர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவன ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மோட்டார் வாகனங்களைத் தவிர்த்து, சைக்கிள் மூலமாகவோ அல்லது நடந்தோ தங்கள் இலக்குகளை அடைய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதனால் நாட்டின் தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு, பெட்ரோல், டீசல் மட்டுமின்றி மின்சாரத்தையும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என முதல்வர் கேட்டுக் கொண்டுள்ளார். அரசு அலுவலகங்களில் குளிரூட்டப்பட்ட வசதிகளின்பயன்பாட்டைக் குறைப்பதுடன், எரிபொருள் சேமிப்பில் மக்கள் தங்களின் பங்களிப்பை வழங்க வேண்டியது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

இந்நிலையில் “நாடு நமக்கு நிறைய கொடுத்திருக்கிறது, இப்போது நாம் நாட்டிற்குத் திருப்பிக் கொடுக்க வேண்டிய நேரம்” என்று குறிப்பிட்ட அவர், சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் எரிபொருள் தட்டுப்பாட்டைச் சமாளிப்பதையும் நோக்கமாகக் கொண்டு இந்த முயற்சியைத் தொடங்கியுள்ளார்.