60,000 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த நியாண்டர்தல் மனிதர்கள் வெறும் வேட்டைக்காரர்கள் மட்டுமல்ல, அவர்கள் மருத்துவ அறிவிலும் சிறந்து விளங்கியுள்ளனர் என்பதை ஒரு புதிய ஆய்வு உறுதிப்படுத்தியுள்ளது. சமீபத்தில் கண்டெடுக்கப்பட்ட நியாண்டர்தல் மனிதனின் பற்களை ஆய்வு செய்தபோது, அதில் கற்களால் ஆன கருவிகளைக் கொண்டு பல் அறுவை சிகிச்சை செய்யப்பட்டதற்கான தடயங்கள் கிடைத்துள்ளன.
மேலும் நவீன கால பல் மருத்துவர்கள் பயன்படுத்தும் டிரில்லிங் முறைக்கு நிகராக, அன்றைய காலத்திலேயே கூர்மையான கற்களைப் பயன்படுத்தி பற்களில் ஏற்பட்ட பாதிப்புகள் சரி செய்யப்பட்டுள்ளன. இந்த கண்டுபிடிப்பு, பழங்கால மனிதர்களின் அறிவுத்திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்திய நுணுக்கமான தொழில்நுட்பங்கள் குறித்து தற்கால மருத்துவர்களையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
இந்த ஆய்வின் மூலம், நியாண்டர்தல் மனிதர்கள் பற்களில் ஏற்பட்ட துவாரங்களைச் சுத்தம் செய்யவும், வலியைப் போக்கவும் திட்டமிட்டு செயல்பட்டது தெரியவந்துள்ளது. பற்களின் எனாமல் பகுதியில் காணப்படும் கீறல்கள் மற்றும் வடிவங்கள், இன்றைய நவீன பல் மருத்துவ சிகிச்சையோடு ஒத்துப் போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
மேலும், அறுவை சிகிச்சையின் போது ஏற்படும் வலியைக் குறைக்க அவர்கள் சில மூலிகைகளையும் பயன்படுத்தியிருக்கலாம் என்று கருதப்படுகிறது. மனித நாகரிகம் மற்றும் மருத்துவத்தின் பரிணாம வளர்ச்சியைப் பற்றி நாம் இதுவரை கொண்டிருந்த எண்ணத்தையே மாற்றியமைக்கும் வகையில் இந்த 60 ஆயிரம் ஆண்டு பழமையான ‘டென்டிஸ்ட்’ குறித்த தகவல் அமைந்துள்ளது.
