பெங்களூரிலிருந்து திரும்பிய காலத்திலிருந்தே தான் வலியுறுத்தி வந்த ஆலோசனைகளைச் சில நிர்வாகிகள் ஏற்காததே, தற்போது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பின்னடைவுகளுக்குக் காரணம் என சசிகலா பகிரங்கமாக வருத்தம் தெரிவித்துள்ளார். “நான் அப்பவே சொன்னேன், ஆனா யாரும் கேக்கல” என்கிற ரீதியில் பேசிய அவர், தவறான முடிவுகளால் கட்சிக்கு ஏற்பட்ட பாதிப்புகளைப் பட்டியலிட்டுள்ளார். “தவறு நடப்பது அரசியலில் சகஜம், ஆனால் செய்த தப்பை உணர்ந்து திருத்திக்கொள்வதில்தான் ஒரு கட்சியின் எதிர்காலமே இருக்கிறது” என்று அவர் ஆணித்தரமாகக் கூறியுள்ளார்.
தொண்டர்கள் மற்றும் பொதுமக்களின் நலனே முக்கியம் எனக் குறிப்பிட்ட அவர், பிரிந்து கிடக்கும் அனைவரும் ஒரு குடையின் கீழ் ஒன்றிணைய வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தியுள்ளார். “என் மனசில் எந்தப் பிரிவினையும் கிடையாது, யாரையும் நான் ஒதுக்கி வைக்கவில்லை” என்று கூறியுள்ள சசிகலாவின் இந்தப் பேச்சு, அதிமுகவின் தற்போதைய அதிகார மையங்களுக்கு விடுக்கப்பட்ட நேரடிச் செய்தியாகப் பார்க்கப்படுகிறது. சசிகலாவின் இந்தத் திடீர் ‘ஓப்பன் டாக்’ தமிழக அரசியல் களத்தில் ஒரு புதிய சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
