அதிமுகவின் கோட்டையாகக் கருதப்படும் நீலகிரி மாவட்டத்தில், அந்தக் கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அதிமுகவின் நீலகிரி மாவட்டத் துணைச் செயலாளரும், உதகை நகர மன்ற முன்னாள் துணைத் தலைவருமான கோபாலகிருஷ்ணன் நேற்று (மே 13) தனது ஆதரவாளர்களுடன் தவெகவில் இணைந்தார். அவருடன் அதிமுகவைச் சேர்ந்த உதகை நகர மன்ற உறுப்பினர்களும் ஒட்டுமொத்தமாக அக்கட்சியிலிருந்து விலகி, தவெகவின் நிர்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும் அமைச்சருமான செங்கோட்டையன் முன்னிலையில் தங்களை தவெகவில் இணைத்துக் கொண்டனர்.

​நீலகிரி மாவட்டத்தில் நீண்டகாலமாக அதிமுகவில் செல்வாக்கு மிக்க நபராக இருந்த கோபாலகிருஷ்ணன் வெளியேறியது, அந்த மாவட்டத்தில் அதிமுகவை நிலைகுலையச் செய்துள்ளது. “மக்களுக்கான அரசியலை முன்னெடுக்கும் முதல்வர் விஜய்யின் கரங்களை வலுப்படுத்தவே இந்த முடிவு” என அவர் தெரிவித்துள்ளார். செங்கோட்டையன் போன்ற மூத்த தலைவர்கள் ஏற்கனவே தவெகவின் பலமாக இருக்கும் நிலையில், தற்போது மாவட்ட ரீதியாகவும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் தவெக நோக்கிப் படையெடுப்பது தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.