“என் சகோதரி இறந்துவிட்டார் என்பதை நிரூபிக்க இதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை” – ஒடிசா மாநிலம் கியோஞ்சர் மாவட்டத்தைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஜிது முண்டா கூறிய இந்த வார்த்தைகள் ஒட்டுமொத்த தேசத்தையும் உலுக்கியது..

கியோஞ்சர் மாவட்டம் தியானாலி கிராமத்தைச் சேர்ந்த ஜிது முண்டா மற்றும் அவரது சகோதரி கலாரா முண்டா இருவரும் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள். கலாராவின் வங்கிக் கணக்கில் இருந்த ரூ.19,300 சேமிப்பை எடுக்க ஜிது முண்டா பலமுறை ஒடிசா கிராமின் வங்கிக்குச் சென்றுள்ளார். ஆனால், கணக்கு வைத்திருப்பவர் நேரில் வர வேண்டும் அல்லது இறப்புச் சான்றிதழ் வேண்டும் என வங்கி ஊழியர்கள் பிடிவாதம் காட்டியுள்ளனர்.

கடந்த ஜனவரி மாதம் கலாரா காலமானார். அவரது இறப்புச் சான்றிதழைப் பெற ஊராட்சி மற்றும் சுகாதார நிலையங்களில் ஜிது அலைந்துள்ளார். “சான்றிதழ் கிடைக்க 5 ஆண்டுகள் ஆகும்” என அதிகாரிகள் அலைக்கழித்ததாகக் கூறப்படுகிறது. வறுமையின் பிடியில் சிக்கிய ஜிது, வேறு வழியின்றி தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்து, அதன் எலும்புக்கூட்டை 3.5 கி.மீ தூரம் வங்கிக்குச் சுமந்து சென்று அதிகாரிகளிடம் காட்டியுள்ளார்.

இந்தச் சம்பவம் தேசிய அளவில் செய்தியாகி அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து, முதல்வர் சொந்த மாவட்டத்தில் நடந்த இந்த நிகழ்வுக்காக அரசு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டனர். கலாராவின் இறப்புச் சான்றிதழ் இரண்டு நாட்களில் வழங்கப்பட்டது. வங்கிப் பணம் ரூ.19,400 உடனடியாக வழங்கப்பட்டது. மாவட்ட நிர்வாகம் சார்பில் ரூ.30,000 நிதியுதவி அளிக்கப்பட்டது. ஜிது முண்டாவிற்கு புதிய வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டு, அதில் பொதுமக்களால் சுமார் ரூ.10.95 லட்சம் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

முன்பு ஒரு ஜோடி காலணி கூட இல்லாமல் இருந்த ஜிதுவிற்கு இப்போது பல ஜோடி காலணிகள், சைக்கிள், அரிசி மூட்டைகள் எனத் தாராளமாக உதவிகள் குவிந்துள்ளன. அவரது ஆதார் அட்டை புதுப்பிக்கப்பட்டு, முதியோர் ஓய்வூதியமும் வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், தனது சகோதரியின் உடலைத் தோண்டி எடுத்ததற்காக, ஜிது தினமும் அவரது கல்லறை முன் மன்னிப்பு கோரி வருகிறார். “நிம்மதியாக உறங்கிய அவளது ஆத்மாவைத் தொந்தரவு செய்துவிட்டேன், அந்தச் சம்பவம் என் வாழ்நாள் முழுவதும் என்னை வாட்டும்” என ஜிது முண்டா உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.