ஐதராபாத்லில் நடைபெற்ற கூட்டங்களில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, உலகளவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருவதால், மக்கள் எரிபொருளைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். வெளிநாடுகளில் இருந்து எரிபொருளை இறக்குமதி செய்ய இந்தியா பெரும் தொகையைச் செலவிடுவதால், அதைச் சேமிக்க மெட்ரோ ரயில், பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து மற்றும் மின்சார வாகனங்களை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும், கொரோனா காலத்தில் பின்பற்றியது போல அலுவலகக் கூட்டங்களை இணையவழியில் நடத்துவதையும், வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையையும் மீண்டும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய பிரதமர், நாட்டின் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, தங்கம் வாங்குவதைக் குறைத்துக் கொள்ளுமாறு பொதுமக்களுக்குக் கோரிக்கை விடுத்தார். குறிப்பாக, நிலைமை சீராகும் வரை திருமணங்களுக்காகத் தங்கம் வாங்குவதை ஒரு வருடத்திற்குத் தள்ளிப்போடலாம் என்று அவர் யோசனை தெரிவித்தார்.
தங்கம் மற்றும் எரிபொருள் இறக்குமதிக்காகச் செலவிடப்படும் அந்நியச் செலாவணியைச் சேமிப்பது நம் அனைவரின் பொறுப்பு என்று குறிப்பிட்ட பிரதமர், பள்ளிகளும் மாணவர்களுக்கு இணையவழியில் கற்பிக்கும் முறையைத் தொடங்க வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தினார். நாம் அனைவரும் இணைந்து செயல்பட்டால் தற்போதுள்ள சர்வதேசப் பொருளாதாரச் சவால்களை நிச்சயம் கடந்து வரலாம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.
