அமெரிக்காவின் கொலராடோ மாகாணத்தில் உள்ள டென்வர் சர்வதேச விமான நிலையத்தில், ஓடிக்கொண்டிருந்த விமானத்தின் எஞ்சினுக்குள் சிக்கி மர்ம நபர் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பார்ப்பவர்களை உறைய வைத்துள்ளன.
கடந்த சனிக்கிழமை இரவு 11:19 மணியளவில், ‘ஃபிரண்டியர் ஏர்லைன்ஸ்’ நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர்பஸ் A321neo விமானம் டென்வர் விமான நிலையத்திலிருந்து புறப்படத் தயாரானது. அப்போது, விமான நிலையத்தின் பாதுகாப்பு வேலியைத் தாண்டி குதித்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர், எவ்வித பதற்றமும் இன்றி ஓடுபாதையை நோக்கி நடந்து சென்றுள்ளார்.
சுமார் 139 மைல் வேகத்தில் விமானம் டேக்-ஆஃப் செய்ய முயன்றபோது, அந்த நபர் திடீரென விமானத்தின் பாதையில் குறுக்கே வந்துள்ளார். கண் இமைக்கும் நேரத்தில் அந்த நபர் விமானத்தின் சக்திவாய்ந்த எஞ்சினுக்குள் இழுக்கப்பட்டு உடல் சிதறி பலியானார். இதனால் விமானத்தின் எஞ்சின் தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
New footage captures a Frontier Airlines plane hitting a trespasser while taking off from Denver International Airport in Colorado. pic.twitter.com/d2ckCOqHXo
— aircraftmaintenancengineer (@airmainengineer) May 11, 2026
இந்தக் கோர விபத்தைக் கண்ணால் பார்த்த ஜான் ஆன்டன்ஸ் என்ற பயணி கூறுகையில், “விமானத்தின் எஞ்சினுக்குள் மனித கால்கள் சுழல்வதைக் கண்டேன். ஒரு பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. பயணிகள் அனைவரும் அலறத் தொடங்கினர், குழந்தைகள் அழுதனர். அது ஒரு நரகத்தைப் போல இருந்தது” எனத் திகிலுடன் தெரிவித்தார்.
விபத்தைத் தொடர்ந்து விமானி உடனடியாகக் கட்டுப்பாட்டு அறைக்குத் தகவல் தெரிவித்து விமானத்தை நிறுத்தினார். விமானத்தில் இருந்த 224 பயணிகள் மற்றும் 7 ஊழியர்கள் அவசர கால வழிகள் மூலம் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
விமான நிலையப் பாதுகாப்பை மீறி அந்த நபர் உள்ளே நுழைந்தது எப்படி என்பது குறித்து அமெரிக்கப் போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். உயிரிழந்த நபர் யார் என்பது குறித்த விவரங்கள் இதுவரை வெளியாகவில்லை. இச்சம்பவம் அமெரிக்க விமான போக்குவரத்துத் துறையில் பாதுகாப்பு குறித்த பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
