அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து கடந்த பிப்ரவரி மாதம் ஈரான் மீது தாக்குதல் நடத்தின. சுமார் 40 நாட்கள் நீடித்த இந்தப் போர், ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்ட தற்காலிக போர் நிறுத்தத்தால் சற்று ஓய்ந்தது. இந்த நிலையில், பாகிஸ்தானில் நடந்த ஈரான்-அமெரிக்கா இடையிலான அமைதி பேச்சுவார்த்தை எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது.
இதைத் தொடர்ந்து, ஈரானின் கடல் பகுதியை அமெரிக்கக் கப்பல்கள் சூழ்ந்துள்ளதால் மீண்டும் போர் பதற்றம் அதிகரித்துள்ளது. அந்த வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு வரி விதிக்கப்போவதாக ஈரானும் பதிலுக்கு அதிரடி காட்டி வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் பேசிய ஈரான் ஜனாதிபதி மசூத் பெஜஸ்கியான், தங்கள் நாடு ஒருபோதும் எதிரிகளிடம் தலைவணங்காது என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
“நாங்கள் பேச்சுவார்த்தைக்கு வருவது சரணடைவதற்காக அல்ல, ஈரானின் உரிமைகளையும் நாட்டு நலனையும் பாதுகாக்கவே” என்று அவர் கூறியுள்ளார். மேலும், போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான சில திட்டங்களை பாகிஸ்தான் மூலமாக அமெரிக்காவிடம் தெரிவித்துள்ளதாகவும், விரைவில் அமைதிக்கான பேச்சுவார்த்தைகள் தொடரும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
