தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள 2024-ஆம் ஆண்டிற்கான அறிக்கையின்படி, இந்தியாவில் வரதட்சணைக் கொலைகள் அதிகம் நடைபெறும் நகரங்களின் பட்டியலில் தலைநகர் டெல்லி தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் டெல்லியில் 111 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் உயிரிழந்துள்ளனர் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மையாக இருக்கிறது.
மேலும் இதற்கு அடுத்தபடியாக கான்பூர் மற்றும் பாட்னா ஆகிய நகரங்கள் முறையே இரண்டு மற்றும் மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளன. லக்னோ, ஜெய்ப்பூர் மற்றும் ஐதராபாத் போன்ற நகரங்களும் இந்தப் பட்டியலில் முன்னிலையில் உள்ளன. தமிழகத்தைப் பொறுத்தவரை, தலைநகர் சென்னை இந்தப் பட்டியலில் 11-வது இடத்தில் உள்ளது. சென்னையில் கடந்த ஆண்டில் 7 பெண்கள் வரதட்சணைக் கொடுமையால் கொல்லப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இந்நிலையில் டெல்லியில் கடந்த 2021-ஆம் ஆண்டு 139 ஆக இருந்த உயிரிழப்புகள் தற்போது சற்று குறைந்திருந்தாலும், பெருநகரங்களில் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளை இந்தத் தரவுகள் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளன. மும்பை, பெங்களூரு மற்றும் அகமதாபாத் போன்ற முக்கிய நகரங்களிலும் வரதட்சணைக் கொலைகள் கணிசமான அளவில் பதிவாகி இருப்பது சமூக ஆர்வலர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
