ஐபிஎல் 2026 கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் மற்றும் அவரது தோழி சம்ரின் கவுர் ஆகியோரது புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

ஐபிஎல் போட்டிகளுக்கு இடையே கிடைத்துள்ள சிறிய இடைவேளையில், பஞ்சாப் கிங்ஸ் அணியினர் இமாச்சலப் பிரதேச மாநிலம் தர்மசாலாவில் இரவு உணவு விருந்து ஒன்றில் பங்கேற்றனர். அப்போது அர்ஷ்தீப் சிங், பஞ்சாப் மொழி நடிகையான சம்ரின் கவுருடன் வருகை தந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் பரவி வருகின்றன.

அர்ஷ்தீப் சிங் மற்றும் சம்ரின் கவுர் இருவரும் காதலித்து வருவதாக ஐபிஎல் 2026 தொடக்கத்திலிருந்தே கிசுகிசுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், பஞ்சாப் கிங்ஸ் அணியின் மற்ற வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களுடன் இவர்கள் இருவரும் இயல்பாக உரையாடிக் கொண்டிருந்தது, அந்த வதந்திகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

அர்ஷ்தீப் சிங் தனது சமூக வலைதளப் பக்கங்களில் வெளியிட்ட சில பதிவுகளின் மூலம், அவருடன் இருப்பது சம்ரின் கவுர் என்பதை ரசிகர்கள் கண்டறிந்தனர். அதனைத் தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி விளையாடும் பெரும்பாலான போட்டிகளில் சம்ரின் கவுர் மைதானத்திற்கு நேரில் வந்து உற்சாகப்படுத்தி வருகிறார்.

தங்கள் உறவு குறித்து அர்ஷ்தீப் சிங் அல்லது சம்ரின் கவுர் இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பையும் வெளியிடவில்லை என்றாலும், ரசிகர்களிடையே இந்த விவகாரம் தற்போது பெரும் சுவாரசியத்தை ஏற்படுத்தியுள்ளது.