சிறு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்து பாடும் “ஜானி ஜானி எஸ் பாப்பா” என்ற புகழ்பெற்ற மழலையர் பாடல் குறித்து உத்தரப்பிரதேச மாநில உயர்கல்வித் துறை அமைச்சர் யோகேந்திர உபாத்யாயா ஒரு வினோதமான கருத்தை முன்வைத்துள்ளார்.
இந்தப் பாடலில் வரும் வரிகள் குழந்தைகளிடையே பொய் சொல்லும் பழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் இருப்பதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.
ஒரு குழந்தை இனிப்பு சாப்பிட்டுவிட்டு, அதை மறைப்பதற்காகத் தனது தந்தையிடமே “பொய்” சொல்லும் விதமாகப் பாடல் வரிகள் அமைந்துள்ளதால், இது பிஞ்சு மனங்களில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது அமைச்சரின் வாதம்.
பாடல்கள் மூலம் நற்பண்புகளைக் கற்றுக்கொடுக்க வேண்டிய வயதில், இதுபோன்ற வரிகள் தேவையா என்ற ரீதியில் அவர் பேசியுள்ளது இப்போது சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
அமைச்சரின் இந்த கருத்துக்கு ஆதரவாகவும், “இது வெறும் விளையாட்டுப் பாடல் தானே” என எதிராகவும் மக்கள் தங்கள் கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
